போய் வருகிறேன் தோழா!விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே!
உனக்கான நேசமும் காதலும்
என்னுள்நிலைத்திருக்கும் என்றென்றும்.......
நாமிருவரும் நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்......
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!
திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே
நீ புருஷனாய் மாறிய
இரசாயனம்புரியவேயில்லை எனக்கு!
அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்
செய்த இராமபானங்களையும் விடவலிமையானவை அவை....
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூடஇரத்தம் கசிகிறது நெஞ்சில்!
எவ்வளவு முயன்றும் -
உன்புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதன மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய் மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!
வேறு வழி தெரியவில்லை;
அதனால்விடை பெறுகிறேன்
உன்னிடமிருந்து கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய்
நாமிருந்த கசப்புகளை மறந்து..........!