Sunday, November 8, 2009

சங்கிலி விதைகள்!!!

சபிக்கிறேன்...
என் உதடுகளை....
வெந்து கருகி இதழ்கள்
ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் இக்கணத்தை...
சபிக்கிறேன்...
என் வார்த்தைகளை...
மந்திரமாய் சொல்ல எண்ணி
மனப்பாடம் செய்தவை நெருப்பில் கசிந்து
தரையில் ஒழுகும் இக்கணத்தை...
சபிக்கிறேன்...
என் இதயத்தை...
உன் சிரிப்பின் விரல்கள்
பிடியில் சிக்கி ஓடாமல்
ஓய்ந்து நின்று விட்ட இக்கணத்தை...
யோசனை கரும்பலகையில்
இருந்த எழுத்துகளை
உன் எச்சில் கொண்டு
அழுந்த துடைத்து விட்டாய்...
கட்டாந்தரையில் மீண்டும் தோற்று
சபிக்கிறேன் என்னையே ஒரு கோடி முறை...
ஆசை செடிகளை மனதின் ஆழத்தில் ஊன்றி நட்டு
நாளையாவது முளைக்கும்
என்று நொடிக்கொரு முறை தரை
பார்த்து நிற்கிறேன்...
மறந்து தான் போனேன்
பாறையாய் இறுகி கனவுகள் உறைந்த நிலம்
உன் மனம் என்று...
ஆலவிருட்சம் முளையிட காணாமல்
மறைந்தே போகும் விதை..
உனக்கு கொடுத்தே காணாமல் கரையும் என் காதலும்...
தெரிந்தே பறிக்கிறேன்
உன் நினைவு களைகளை...
தெரிந்தே புதைக்கிறேன்...
என்னையும் அதனுடன்...
முற்றுபுள்ளி வைத்த பின்னும்
தாண்டி போய்க்கொண்டே இருக்கும்
உன் வார்த்தைகள்..
இன்னும் கிடக்கிறேன்
அதே கட்டாந்தரையில்...
ஆசையாய் நட்ட செடிக்கு
பதில் வளர்ந்து நிற்பதோ
நீர் கேட்காத
என் சங்கிலி தோட்டம்...
வளர வளர இன்னும் என்னை
இறுக்கி தரையில்
ஆழ பதித்து...
சிறகுகள் வளர்ந்தும்
பறக்க இயலாது
சங்கிலி குவியலில்
மெல்ல புதைந்து...
நான்....