Friday, October 16, 2009

வட்டம்!!!

எப்போதும் நடக்கும் பாதை
இயந்தரதனமாய் நடப்பேன்
என்னுடைய அறை முழுக்க
வாடை!!!
இன்னதென்று பிரித்தெடுக்க முடியாது...
நாசியில் பட்ட நேரம்
திடுக்கிட்டு கண் திறந்து பார்ப்பேன்
ரத்தமும்
மலக்கழிவும்
எச்சமும்
நோயும்
மெல்ல கசியும் உயிரும்
கலந்து தரும் வாடை அது...
எதன் சதவிகிதம் அதிகம் என்பது
அன்றைய நாளை பொறுத்து!
எத்தனை நாள் முயன்றும்
பழக்கபடாத வாடை...
கண் முன் கசியும் உயிர் நாளும்
கண்டு எத்தனை நாள் இன்னும் மிச்சம்
என்று கணக்கிடும்
சித்திர குப்தன் வேலை எனக்கு!
என்றோ உயிருடன் இருந்து
இப்போதோ நலிந்து
மெல்ல வாடை கசிய
என் முன் நிஜ மனிதர்கள்...
சொந்த பெயர்கள் மறந்து
நோயின் பெயரால் கூப்பிட படும்
கூடுகள்...
சொந்தங்கள் சுற்றமாய் சில நேரம் கேட்பார்கள்
இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று
மனப்பாடம் செய்து வைத்த பதில்
கூச்சமின்றி என் வாயில் இருந்து...
நோயின் வீரியம்
மிச்சமீதி இருக்கும் தெம்பு
எல்லாம் பொறுத்து இத்தனை
நாள் என்ற என் கணக்கை...
வருவு செலவு கணக்கு கேட்ட திருப்தியில்
அவர்கள் சமாதானமாய் செல்வார்...
சில வேளை சில கூடுகள் பேசும்
பக்கம் சென்று
இன்னும் எத்தனை நாள் என்று நான்
துலா தட்டை தூக்கி பார்க்கும் நேரம்...
மெல்லிய இருட்டின் பயம்
கண்ணில் தெரிய
என் கை பற்றி சிறிது நேரம் பேச கெஞ்சும்
மனிதம்
எனக்கும் ஆசை தான்...
கை பற்றும் அந்த நொடி
மனம் மெல்ல அசைபோடும்
இவர் வாழ்கை எப்படியோ என்று
எத்தனை முறை சிரித்தாரோ
எத்தனை முறை அழுதாரோ
எத்தனை முறை தோற்றாரோ
ஆயினும்
அடுத்த நொடி புத்தி பேசும்
இது சரியான நடைமுறை அல்ல என்று...
நான் கொடுத்த உறுதிமொழியில்
நெஞ்சுக்கும் எண்ணங்களுக்கும்
இடமில்லை...
மனம் லயிக்காது
புத்தி மட்டுமே செயலிட வேண்டும் என்று
சத்தியம்...
கை நீட்டி சிறிது மனிதம் தேடும்
கையை விலக்கி
கல்லை போல்
வேறு கூடு நோக்கி
என் நடை...
இன்னுமொரு உயிர் அழுகி
வரும் வாடை
என்னில் இருந்து
என்பதை புரிந்தும்
வட்ட வட்டமாய்...
நான்!!!