
அம்மா சொல்ற ஒரு ஆசை கதை...
தூங்கணும் அதுக்கு அப்புறம்...
தொல்லை பண்ணாம...
ரொம்ப நாளைக்கு முன்னாடி
ஒரு அழகான தேசம்...
சிரிப்பு மட்டும் தான் அங்கே மொழி...
அந்த அழகான ஊர்ல
ஒரு சந்தோஷமான குடும்பம்...
அந்த வீட்டில ஒரு பொண்ணு
நம்ம கதாநாயகி...
கருவாச்சி தான்...
எப்பவும் சிரிப்பா...
திடீர்னு அந்த ஊர்ல ஒரு புயல் அடிக்க
அந்த வீடு ஒடஞ்சி போச்சாம்...
புயல் அடிச்சதும் ஆளுக்கொரு பக்கம்
பிரிஞ்சு போய்ட்டாங்களாம்...
பாவம்!
அந்த பொண்ணு வேற ஒரு நாட்டுல போய் விழ...
அங்கேயே இருக்கா... சோகமா....
ஒரு அழகான வீரன் வந்து
கல்யாணம் பண்ணிக்க
கொஞ்சம் சந்தோஷமா இருக்கா....
இதுல ஒரு குட்டி ராஜகுமாரன் பிறந்துட்டான்
அந்த புள்ளைக்கு...
பட்டு குட்டி...
அழகன்....
ஆசையாய் எப்பவும் இருக்க
திரும்ப ஒரு பூகம்பம்...
அவ ஒரு பக்கம் போக
அவளோட செல்லகுட்டி இன்னொரு திசையில்...
இப்போ தான் தொடங்குது
அவளோட பிரயாணம்
அவளோட குழந்தையை தேடி...
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏற முடியாத ஒரு மலையில
ஒரு சாவி...
அந்த சாவி தேடி போயிட்டே இருக்கா அவ.
இனிமே தான் சாவி தேடி
சாவி சேர போற பூட்டு தேடி
பூட்ட தொறந்து
அதில இருக்க வரைபடம் எடுக்கணும்...
கண்டுபிடிக்கற திசைகாட்டியும்....
சாவி தேடுற வழியெல்லாம்
நெறைய ஆபத்து...
ஆனாலும்
கெட்ட மிருகத்தை எல்லாம் கொன்னுபோட்டுட்டு
பசியோட இருக்கா செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு
வர ராட்சசர் எல்லாம் வதம் பண்ணிட்டு
போய்கிட்டே இருக்கா..
அந்த வரைபடம் அவளை கூட்டி போகும்
அவளோட அந்த பிஞ்சு இதயத்துகிட்டே...
அந்த இதயத்தை திரும்ப எடுத்து
தனக்குள்ளே வச்ச தான்
அவளுக்கு உயிரே வரும்...
அது வரை நடந்திட்டே இருப்பாளாம்...
செல்லம்...
கண்ணா...
தூங்கிட்டியா பட்டு...
நாளைக்கு திரும்ப கூப்பிடுறேன்
இன்னொரு கதையோட...
இப்போதைக்கு என் தொலைபேசி
மட்டுமே கடக்கும்
ஏழு கடல் ஏழு மலை...
சீக்கிரம் நானும்...
அதுவரை
உன் எச்சில் முத்தத்துக்காக
ஏங்கிட்டு இருக்கும்
சிரிப்பு தொலைந்த
கருவாச்சி
உன் அம்மா...