கடைசியாக ஆசையோடு பார்த்த பார்வைகள்
எப்போதென்று எழுந்த கேள்வியை
கவ்வி விழுங்கி போனது
கோபமாய் கடைசியாக பார்த்த பார்வைகள்!
வெறுப்போடு முகம் திருப்பி போன நிமிடங்கள்
சேர்த்து துப்பியது நீ இருக்கும் வரை
நீ மட்டுமே எப்போதும் வேண்டுமென்று
என்று அழுத கண்ணீரை எல்லாம் !!!
பதில் பேசாது, உடல் அசையாது,
இறுகி பாதி மூடிய விழியின் மேல்
அள்ளி போடப்பட்ட மண் வழியே
பார்த்து நின்ற உறைந்த பார்வை
மனதிற்குள் ஏதோ உடைத்து போகிறது!!!
நீல நிறத்தில் சவப்பெட்டி ஒன்றும்
பக்கத்தில் விழுங்க வாய் திறந்து
காத்திருந்த குழியொன்றும்
அதில் அடக்கமாய் படுக்க நீயும்
என்னவாகவோ உன்னோடு பிழன்ற நானும்!!!
முகம் கடைசியாக பார்க்க சொல்லி வேகமாக
பெட்டியை மூடிவிட பார்க்கும் கைகளும் குரல்களும்
உன்னையும் என்னையும் சுற்றி!
இறந்து போன உன்னை எப்படி கட்டி அழவேண்டும்
என சொல்லியபடியே செல்கிறது புடவைகளும் அதன் வாசங்களும்!
கோழி குஞ்சின் வயிற்று சூடு போர்த்தி வந்தவன் நீ!
சில்லிடும் உதடு முதன்முறை உன்னிடம்
முத்தம் கொடுக்க நெருங்கிய போது யோசித்தேன்
எப்போது கடைசியாக கொடுத்தேன் ஆசையை என்று!!
பதறி போகிறது மூளையும் அதனோடு இருக்கும் இதயமும்
நினைவில் இல்லையே கடைசியாக
உன்னை கட்டியணைத்ததும்
உன்னை முத்தமிட்டதும் என்று!!!
கேள்விகள் நிறைய இப்போதும்
வலித்ததா இறக்கையில்?
அழுகி போகிறாயா?
உன்கூட வைத்து புதைத்த குட்டி பொம்மை சுகமா?
கல்யாணத்திற்கு தைத்த கோட்டும் அழகாக இருந்தது புதைக்கையில்!
என்னை பார்த்தாயா ?
உன்னால் இறக்க முடியும் என்று
இன்னும் உறைக்கவில்லை!!!
எனக்கு பசிக்கிறது என்று நீ கேட்கையில்
கொடுக்க உணவு இல்லாது நான் தேடும் கனவுகளும்
அப்பாவை தேடி ஓடும் கனவுகளோடு
கலந்து தொடர்கிறது
இப்போதெல்லாம் இரவுகளில்!!
இறக்கும் ஒவ்வொரு முகத்திலும்
உன் வாசம் பூசி மறைந்துவிட்டாய் நீ!!!
இத்தனை நாள் பார்த்து வளர்த்துவைத்த
கோபமும் நானும்
இனி என்ன செய்வது என்று புரியாது
நிற்கிறோம்
தொடங்கும் முடிவும்
முடியும் தொடக்கமும்
இணைகிறது ஒரு புள்ளியில்!