
இரவுகளில் ஒரு கந்தர்வன் வருகிறான்..
கறுப்பு குதிரையில் சாட்டை சுழட்டியபடி!
தூங்கியும் தூங்காத வேளைகளில் வரும்
அவன் வாசம் பிடிக்கிறது...
ரத்தமும் தோல்வியும் திமிரும் வெறியும்
கலந்த ஒரு இருட்டு வாசம்...
அவன் பேச்சு மிக மெதுவாய் கேட்டாலும்
காதுக்குள் அது பிரளயமாய்...
நான் எச்சில் ஒழுக தூங்கும் நிமிடங்களை
என் சுவற்றின் விட்டத்தில் இருந்து பார்க்கிறான்...
அவனின் விசும்பல் மிக நுட்பமாய்...
என்னை உறக்கத்தில் புரட்டி போடும்!
விழித்துப் பார்க்கிறேன்
மூக்குகள் உரச, அவன் அந்தரத்தில் மிதக்கிறான்..
கண்முன் விரிந்த கனத்த கடலாய்
கனவுகள் அற்ற கனவில் எனக்காய் உயிர்த்தெழுகிறான்...
கைப்பற்றி அழைத்துப் போகும் உன் தேசத்தில்
சிரிப்புகளும் சோகங்களும் வறண்டுவிட்டது என்கிறான்!
என் கறுப்பு கந்தர்வனே!
இத்தனை நெருக்கத்தில் சுவாசம்
தெறிக்க நிற்கும் உன்னை கைநீட்டி அணைக்கத் தேட...
கணக்கெடுக்க முடியா எத்தனை தொலைவில் அவன்!
கறுத்த அவனில் இருந்து முளைக்கும் ஆயிரம் கரங்களும்
என் பாதையாய் என் வானமாய் விரியும்!
உன்மத்த நிதர்சனத்தை
என் படுக்கையில் கரைத்துக்கொண்டு இருக்கும் எனக்கு
இன்னமும் தெரியாது அவன் யார் எனக்கென்று..
சிரிப்புகளின் ஊடே குரல் குழைந்து
சொல்கிறான்..
இருக்கும் தோலான உன் உடலை கழட்டிவிட்டு வா...
மிதக்கும் உன் ஒன்றுமில்லாதவைகளுக்கு
கொடுக்கிறேன் மந்தகாசத்தை...
உடுத்திக்கொண்டு பார் புரியும்
நான் உன் தோழி...
நீ என் தோழன்...