Sunday, August 24, 2008
எதற்காக?
தாயின் வயிற்றில் கருவுற்ற
நாள் முதல் ஓட்டம்!
நேரத்துடன் போட்டி...
கடுகளவில் தொடங்கி
கையும் காலும் முளைத்து வளர்ச்சி...
பத்து மாதம் போக
வெளிஉலகம் தொட்ட நேரம் தொடங்கி...
வயிற்று பசி...
வளர பசி...
உயிர்வாழ பசி...
புத்தி தெளிய தெளிய
எல்லாம் கற்க வெறி!
அன்னையும் தந்தையும் அரவணைக்க
எல்லார் முன்னிலும் விருட்சமாய் வளர
கல்வி பசி...
கண் விழித்து... போட்டி இட்டு...
தேர்வுகளின் பிடிகளில் சிக்கி
ஒரு போராட்டம்...
படிப்பும் முடித்து
வேலைக்கான அலைச்சல்...
மீண்டும் ஓட்டம்...
வேலையும் கிடைக்க
வாழ்வில் மீண்டும் பசி
இன்னொரு துணை தேடி...
புணர பசி...
இன்னொரு ஜீவனை படைக்க பசி...
நாட்கள் ஓட ஓட
உடலும் சோர்ந்து கடமைகள் அழுத்த
இன்னும் வேண்டும் வேண்டும்
என்று பட்டியல் நீள
திரும்பி வந்த பாதை நோக்க
நாட்கள் உருண்டு கரைந்து!!!
எல்லாம் கிடைக்க
இன்னும் ஓட்டம்
இத்தனை நாள் சுமந்தது எல்லாம்
சட்டென்று ஓர் நாள் மறைந்து போக
நிதர்சனம் நான் தான் என்று விளக்கும்
இறப்பு!!!
எதை நோக்கி இந்த ஓட்டங்கள்,
இந்த கண்ணீர், இந்த ஆனந்தம்
என்ன தான் பொருள்?
எதற்கு வந்தோம்...
என்ன சாதித்தோம்...
எங்கு போகிறோம்...
விடை தெரியாத கேள்விகள்
செத்த பின் சொர்க்கமா நரகமா...
எந்த கடவுளை பின்பற்றினால்
சொர்க்கம் நிச்சயம் என்ற போட்டிகளின் மத்தியில்...
ஒன்று மட்டும் நிஜம்
பிறப்பை கணிக்க தெரியாது போனாலும்
எல்லோரும் இறப்பது மட்டும் நிஜம்
என்ற உண்மை மெல்ல தெளியும்...
Subscribe to:
Posts (Atom)