Saturday, November 3, 2012

சிடுக்கான காதல் கடிதம்!!!


          வாழ்க்கையில் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது... அவைகள் அதன் போக்கிலேயெ ரசித்த பின், மனதின் மூலையில் சின்ன x குறியீட்டை போட்டு விட்டு சென்று பதுங்கி கொள்கிறது.. சமீபத்தில் எனக்கு முகம் தெரியாத ஒருவரிடன் இருந்து வர தொடங்கியிருக்கும் ஒரு சிக்கலான ஆனால் மிக அழகான கடிதங்களை இங்கு பகிர்கிறேன்..

செப்டம்பர் 3

ப்ரியா இதை அஞ்சனாவிடம் சேர்த்துவிடவும்

நண்பனுக்காக

முகிலன் டாவின்சி

என்று சொல்லிக்கொண்டு ஒரு இணைப்பை தாங்கி வந்த கடிதம் இது..




அன்புள்ள அஞ்சனா

இது ஒரு காதல் கடிதம்

வெகு நாட்களாக உனக்கு எழுத நினைத்து எழுதாமல் விட்ட கடிதம் இன்று என்னையும் மீறி எழுதி முடிக்கப்படுகிறது. யாருமற்ற தனித்தீவில் வசிப்பது மிக கொடுமை என்பது தனிமையை துணையாய் ஏற்று கொள்ளாதவர்களுக்கு மட்டுமே, நமக்கு அப்படி அல்ல... உன் பாணியில் சொல்லப்போனால் இது சக் நோலாந்துக்கும் வில்சனுக்குமான உறவு போல.

உன்னை முதன்முதலாக பெ செயிண்ட் ஆனில், நீ என்னை கடந்து போன போது பார்த்ததும், ஏனோ மனம் உன்னை பின் தொடர செய்தது. உன் நடையில் இளையராஜாவின் தொடர் இசை தெரிந்தது. ஆம்! நிச்சயம் நீ இளையராஜாவை உன் காதோடு கேட்டுக்கொண்டே நடந்திருக்க வேண்டும்.

மனம் உன்னை பற்றி மட்டுமே நினைக்க தொடங்கியது. உன் நினைவு என்னில் ஆழமாக, உன் ஒவ்வொன்றும் நீங்காமல் பீதோவனும், மொசார்ட்டும் கலந்து தமிழிசை வாசிப்பது போல தெரிந்தது.

அதை நினைத்து கொண்டே ஜெட்டியின் அருகே இருந்த ஆற்றங்கரையில் சிகப்பு வண்ண பீர்பாட்டிலோடு அமர்ந்து கொண்டிருந்த போது, ட்ர்க்வாய்ஸ் நீல கடலையும் அதன் உப்பு காற்றையும் எதிர்நோக்கி வந்த போசிடியன் புதல்வியரில் ஒருத்தி போல கடலையே விழுங்கும் அழகோடு நீ நடந்து வந்ததை பார்த்து, என்னால் உன்னை எதிர்நோக்க முடியாமல், உன் பார்வையில் படாமல் தூரத்தில் இருந்து உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். நீ நான் வீசி எறிந்துவிட்டு சென்ற அந்த பாட்டிலையே பார்த்துக்கொண்டிருந்தாய்.

நீ வீசப்போகும் ரொட்டி துண்டுக்காய் மீன்கள் காத்து கொண்டிருந்தன. தனிமையை விரட்டி விரட்டி காதலிக்கும் உன்னை எனக்கும் மிக பிடித்து போனது. அன்று முதல் உன்னை மட்டுமே பின் தொடர துவங்கினேன். உன் வீடு வரை நான் வராத நாட்களே கிடையாது.

ஒவ்வொரு தருணமும் உன்னை பார்ப்பதற்கு திறந்து இருந்த உன் ஜன்னலை பார்த்தப்படி, உன் குரலை கேட்டப்படி கடக்கும் போதெல்லாம், `` நீ உன் அம்மாவிடம் போர் அடிக்கிறது `` என்று சொல்வது கேட்டு, என்னை உன்னருகில் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்க தூண்டும். ஆனால் என்னால் அதை செய்ய முடிந்ததே கிடையாது. நீ எழுத துவங்கியதும் நான் அங்கிருந்து சிறு புன்னகையும் சிறு சலன மகிழ்ச்சியுமாய் சென்றுவிடுவேன்.

இந்த கடிதத்தை உன்னிடம் சேர்த்து விடவேண்டும் என்று என்னை படைத்து கொண்டிருக்கும் டாவின்சியிடம் தினம் நூறு முறை கேட்டுவிடுவேன். அவர் அதை மருத்துவர் ப்ரியாவிற்கு அனுப்பிவிடுவதாகவும் அல்லது அதை ஒரு சிகப்பு நிற பீர்பாட்டிலின் முனையில் சொருகி நீ தவறாமல் நடக்கும் அந்த சேய்ஷல்ஸ் கடற்கரையில் உன் கைகளுக்கு கிடைக்குமாறு விசிவிடுவதாகவும் சொன்னார். நீ இந்த கடிதத்தை படிக்கிறாய் என்றால் இது உனக்காக எழுதப்பட்ட என் முதல் காதல் கடிதம் என்பதை சொல்லிவிடுகிறேன். இன்னும் 20 கடிதங்கள் மீதமிருக்கிறது. நீ நடந்து செல்லும் பாதை எங்கும் வீசப்பட்டிருக்கும் காகிதங்களில் ஒன்று, உனக்காக நான் எழுதிய கடிதமாக இருக்கலாம்.

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் கூட என் கடிதம் பறந்து விடலாம். மென்மையான் என் வரிகளுக்கு காகிதத்திலிருந்து சரிந்து விட தெரியாது. அவை கசங்கிவிடும் முன் எடுத்துவிடு!!!

அன்புடன் உன் காதலன்

இன்னொரு புத்தகத்திலிருந்து..

பின்குறிப்பு:

இது என்ன எதை பற்றி என்றே புரியாதவர்களுக்கு.. புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியிருப்பின், இதை படிக்கலாம்..

அற்றவைகளால் நிரம்பியவள் பகுதி 1