Monday, November 2, 2009

மரணஓலம்...

என் குற்றுயிர் பிரியும் முன்
உன்னிடம் சில கேள்விகள்...
உனக்கு சில பதில்களும்...
புழுதி படிந்தும், துருவேறியும்
கனத்த மௌனத்தின் சாலையில்.
சிரிக்கும் முகமூடி நிதம் அணியும்
குரூபி நான்...
என் சிரிப்பின் சங்கீதம் எல்லோரும் ரசிக்க
என் காதில் மட்டும்
என் மரணஓலம் இரைச்சலாய்...
இருட்டில் உன்னை தேடுகிறேன்
கேள்வியோடு...
எதனால் உன் என் வார்த்தைகள்
குருதி வழிய வலியோடு
மிச்சமீதி காதலும் வற்றிபோகும்படி
சிறைப்பட்டு...
தனிமை ஜீவனை உறிஞ்சியபடி
எட்டி நின்று பார்க்க...
சதை பிடுங்கி திங்கும்
நம் சச்சரவு வல்லூறுகள்...
உன் கேள்விகளுக்கு பதில் இருந்தும்
வலியின் உச்சத்தில்
விடைகள் மறுத்து...
அன்பு மட்டுமே தேடி
உனக்காக சோகமூட்டை சுமந்த அகதி நான்
எப்படி மறந்தாய் இதை...
சிரிப்பும் அணைப்பும் நிறைந்த
நினைவுகள் பழுப்பேறி போய்...
உன் குற்றச்சாட்டு குரல் கேட்கையில்
என் இத்தனை நாள் வாழ்வும்
ஆயிரம் பேர் பார்க்க
கழு ஏறுவதை உணர்கிறேன்...
என் அன்பாய் இருந்தவனே
உள்ளுக்குள் கொப்பளிக்கும் என் கோபத்தின்
உச்சத்தில் இதோ அறுக்கிறேன்
இறக்கும் கணத்திலும்
என் உதடுகளை....
உயிர் பிரிந்தாலும் என் முகம்
நீ பார்த்து மனம் கனத்து
உன் கோப வெறுப்புகள் மறந்து
முத்தமிட்டு வழியனுப்ப நினைத்தால்
உதடுகள் அற்ற என் கோர முகம் வரவேற்கும்
என் வலி விகாரம் காட்டி...