
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ....
என் பிறந்த பூமி...
கப்பல் மெல்ல கரையை
விட்டு நகர நகர புள்ளியாய்
நான்
வைஷாலி...
நீரில் கலையும் என் பிம்பம்!
நிலவொளியில்.
நின்று பார்க்கிறேன்...
என்ன சொன்னார் அப்பா...
என் கையில் தானே எல்லாமே என்றார்...
அங்க நாட்டு அரசர் அல்லவா....
எப்போதும் ஆசையாய் அவர் கரம்பற்றி பேச தோணும்...
என் ஓவியங்களை ஒரு நாளும் பார்த்ததில்லை...
ஆனால் அம்மாவின் மீது பிரியம் தான்...
இரவு வேளையில் மட்டுமே புழங்கும் தாய்...
லோம்பதரின் ஆசை நாயகி அல்லவா ...
நீர்மேகம் மூண்டு இருண்டது கண்களில்...
அக்காவை விட இவள் அழகு தான்
ஆனால் எப்படி பேசிவிட்டாள்...
வெறும் ஒரு சதைபிண்டம் போல்..
தடித்து மெத்தென எப்போதும் பிளந்து தான் இருந்தது
அவள் அழகு அதரங்கள்...
மருண்ட கண்களும்
மல்லிகை மணமும்
தனங்களும் ப்ரிஷ்டங்களும்
தாங்கும் மெல்லிய இடையும்
வளைந்த பாதையாய்........
குழந்தை தானவள் இன்னும்...
அக்காள் சாந்தா
பட்டத்து இளவரசி...
ராமரின் தங்கை, தசரதர் புத்திரி,
லோம்பதரின் வளர்ப்பு மகள்...
இவளை பார்த்தவர் அப்படியே
ஆசை அதிர்ச்சியில் நிற்க
அக்காளுக்கு புரிவதில்லை...
இது அவள் தவறில்லை என்று...
ஆசைநாயகி மகள் தான்
ஆனாலும் தங்கை தானே...
ஏன் இத்தனை காழ்ப்போ?
தனிமை எனக்கு ஒரே தோழி...
என் செல்ல மழையும் தான்...
மழை வாசம் மிக பிடிக்கும்!
குளக்கரையில் அமர்ந்து
சில்லென மழையில்
சூடாய் என் கரிக்கும் கண்ணீர் அடித்து போவதை
உணர்வது பிடிக்கும்...
அலையும் கூந்தலை
ஒதுக்கியபடி இருண்ட மேகம் பார்க்கிறேன்...
மழை பொய்த்து தான் போனது
இந்த வருடமும்...
செய்யாத யாகம் இல்லை...
பாவம் மக்கள்...
ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டாம்...
ராஜகுரு சொன்னால் மீற யார்?
என் தாய்க்கும் ஒரு இடம் அரசவையில்...
எனக்கும் மகள் என்று ஒரு அங்கீகாரம்...
இத்தனை நாள் எல்லா கலையும் கற்று தந்த
தாய் சொன்னாள்...
'' அப்பாவுக்காக, செல்லம்! ''...
ரிஷ்யஸ்ருங்கன்........
எப்படி இருப்பான்?
ஊர்வசியின் மகனாமே...
முனிவர் விபபுகர் வளர்த்த அழகனாம்..
அவன் வந்தால் நிஜத்தில் மழை வருமோ?
பெரிய தவசீலனாமே.... சபிப்பானோ?
சக மனித வாடையே அறியாதவன்...
பெண்மை என்ற ஒன்று உண்டு என்றே அறியாதவன்...
இவனை நான் காதலித்து அழைத்து வரவேண்டுமாமே....
காமசாஸ்திரம் படித்தவள் தான் எல்லா இளவரசிகள் போல...
ஆனால் இவளும் ஆண் வாடையே பார்க்காதவள் தானே...
கப்பல் மெதுவாய் தளும்பிய படி போக
இவள் மனமும்
அதனோடு தாளஜதியில்...
எட்டியது கரை...
கண் தடவும் மயிலிறகு பசுமை
இத்தனை அழகா இந்த இடம்?
மூலிகையும் மண்வாசமும் பூக்கள் சிரிக்கும்
வாசம் கலந்து ஒரு ஈர நறுமணம்..
அம்மா சொன்னது நினைவில்...
மூன்று நாளில் வந்துவிடவேண்டும்
நடக்கிறேன் ...
பட்டு பாதம் புல்லில் பட...
மெல்லிய நடுக்கம் மயக்கம்
நடைதடுமாறி....
பிரமித்து நின்றேன்
வெள்ளி நீர்வீழ்ச்சி...
காணாத காட்சி
கணங்கள் விழுங்கி...
மெல்ல கண் திருப்ப
இதோ அவன், ரிஷ்யஸ்ருங்கன் ...
நீரில் மெல்ல அவன் திரும்ப
இப்போது புரிந்தது எனக்கு...
தோள் கண்டு தோளே காண்பது என்ன என்று...
அவனும் திரும்ப, கண் கவ்வினான்...
மெல்லிய சிறகாய் உடலில்
தழுவியும் தழுவாது நின்ற உடை...
மறைத்தும் மறைக்காத தேகத்தை
முதல் முறை பார்க்கிறான்....
இவன் தேவதையின் மகன் தான்....
முழுமையான ஆண்...
நான் பார்க்கும்போதே
நீர்விட்டு கரைநோக்கி வர
ஸ்தம்பித்து நிற்கிறேன் ...
அரசவையில் கேடயம் பட்டுபீதாம்பரம்
வாள் தாங்கி நின்ற வீரர்கள் அழகு என்று எண்ணிய
அவளுக்கு இன்று உரைத்தது
உடை களைந்தும் ஆண்மையின் ஆதிக்கம் உண்டு என்று...
கண் விரிய அருகில் வந்தான்...
ஈரவிரல் நீட்டி கன்னம் தொட்டான்!
கேட்கிறான் இப்போது
" நீ என்ன ?"
விரல்கள் முகமெங்கும் கோலமிட...
" நான் பெண் "...
" உன் எதிர்பதம் "...
பற்றியெரிகிறது இவன் விரல் போகும் இடமெல்லாம்...
அவன் கை அவளை வளைக்க
நின்றது சுற்றும் பூமி...
நீருக்குள் அழைத்துபோனான்...
சிறுகுழந்தையின் வியப்போடு..
சிரிப்பு வந்தது...
தீண்ட அவன் விரல் போகும் வழியெங்கும்
அவன் உதடுகள் ஊர்ந்தது....
மெல்ல உணர்ந்து ...
மெல்ல மூழ்கி ...
மெல்ல இறந்து ...
ஒரு கணம் மென்மையாய்
மறுகணம் மூர்க்கமாய்...
கண்செருகி
முழுவதுவமாய் வியாபிக்கிறான் .....
கூடல் சுகம் பற்றி பக்கம் பக்கமாய் படித்தவள்
கை பற்றி அழைத்து போக ...
பித்தானான்!
இவள் காமபாடத்தில்...
புதிய வாழ்வு...
முதன்முதலில் ஒருவன்
அங்கீகரிக்கிறான்....
இங்கு இவள் பரத்தையின் மகள் இல்லை...
இவள் ஒரு உயிர்...
சட்டென பறக்கிறாள்....
'' நான் தேவை இவனுக்கு'' ...
'' என்னை எனக்காகவே பிடித்து இவன் ''....
எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபியாய் இவள்..
காயசண்டிகையாய் அவன்...
பெரும் பசி...
உடல் நொந்தது...
முரடன் இவன்...
மனசு இனித்தது...
ஒரு நொடி பிரிய விடாமல் கரத்தில் சிறை வைத்தான்...
பேரின்ப தவத்தில் திளைத்து வாழ்ந்தவன்
இந்த பேதையின் மடியில் சிற்றின்ப போதையில் மிதந்து...
மூன்று நாட்கள் நொடியில் மறைய
செத்து மடியும் வறட்சி நினைவில்...
" விடை கொடு, அன்பே "
மனதில்லாமல் கேட்டேன்...
இவன் வனம் இது!
எனக்கு இங்கு இடமில்லை ...
இவனை இங்கிருந்து பிரிக்க மனமில்லையே, எனக்கு..
சூறாவளிகளில் கூட நின்று தவம் செய்தவன்
கலங்குகிறான் முதன் முதலில்...
'' நானும் வருகிறேன்'' என்கிறான்
புதியதாய் பிறந்தவளாய்
மலர்கிறேன் ...
உதடு பற்றி நன்றி உரைத்தேன்
மௌனமாய்...
கனவுகள் கண்களை கொள்ளைகொண்டது
அன்பு
இளமனது எங்கும் பரவி...
இவன் கை பற்றி இவள்...
முதன்முதலாய் எனக்கென
ஒரு உலகம் பிறப்பதை உணர்கிறேன் !
நாடு திரும்புவோம்... மழை வரும்...
காடு திரும்புவோம்... காதலாய் வாழ்வோம்...
அவன் சொல்ல கண்கள் பணிந்தேன்!
கப்பல் நாடு திரும்ப
துறைமுகம் முழுக்க தலைகள்...
நட்ட நடுவே பெரிய மேடை...
இவன் முகம் சற்றே மிரண்டு!
கண்டதில்லை மக்கள் கூட்டத்தை...
அவன் கைப்பற்றி
கண் நோக்கி சொல்கிறேன்
'' நான் இருக்கிறேன் கண்ணா! ''
பயப்படாதே...... என்று!
அப்பா விரித்த கரத்தோடு வரவேற்கிறார்
ஒரு புறம் யானைகள்
ஒரு புறம் பூந்தோரணங்கள்
ஒரு புறம் முரசும் சங்கும் முழங்க
ஒரு புறம் பூமாரி பொழிய
ஒரு புறம் வேதங்கள் ஓத...
இவள் கன்னம் சிவந்தது...
இத்தனை பேர் முன்னிலையில் நான்
இவன் கரம் பற்றபோகிறேன்...
மெல்ல முன்னோக்கி அவனுடன்
நடக்க இயல அரசவை கூட்டத்தில்
சிக்கி அவன் கை
அவள் கையை விட்டு....
சிரிப்பு மெதுவாய் குறைய
இடித்து தள்ளி அவனுடன் நடக்க எண்ண
அவன் முகச்சாயல் பார்க்கிறேன் ...
முதன்முறை இவளை பார்த்த
அதே வியப்பு!!!
சுற்றி நிற்கும் மக்களும் அவர்களின் நிறங்களும்
சத்தங்களும் அவனுக்கு பெரும் வியப்பு...
மறந்தே போனான் அவளை...
சட்டென எல்லாம் அமைதியுற
காற்றை கிழித்து ஒரு குரல்...
லோம்பதரின் குரல்...
'' பெரும் பாக்கியவான்கள் நாம்...
இப்படி ஒரு யோகி நாம் காண நேர
எத்தனை தவம் செய்திருக்கிறது
நம் பூமி'' கண் கலங்க என் தந்தை...
'' இவர் கால் பட்டதும் மேகம் கருக்கிறதே...
இவர் இனி இந்நாட்டு மன்னர்!!!
'' என் மகளை மணம் செய்து இந்நாட்டை
வளமுற வழிநடத்தி செல்வார்''...
பூரித்தேன்!!!
இறுமாந்தேன்!!!
''என் தந்தை என்னை என் காதலனுடன்
என்னை துச்சமாய் மதித்த இந்த நாட்டின் முன்
கரம்பற்றி கொடுக்க போகிறார்''
நான் ஆசைநாயகியின்
காதல் பிறப்பு மட்டுமில்லை
இந்நாட்டு ராணி....
மனம் துள்ளியது...
முதல் மழைத்துளி என் மேல் பட
எனக்கு பிடித்த மண்வாசம்...
ஆரவார இரைச்சல்...
என்ன சுகம் இந்த நொடி...
என் தந்தையின் குரல் மல்க
அழைக்கிறார் என்னை...
" வா! என் அருமை மகளே! "
இத்தனை பேர் மத்தியில் கம்பீரமாய்...
மழை இப்பொழுது அழகாய் தூற
பூமித்தாய் ஆவலாய் குடிக்கிறாள்
தாகம் தீர....
நெஞ்சு நிமிர, கண் பளபளக்க
கன்னம் எரிய நான்...
வெட்கி நடக்கிறேன்
கூட்டத்தை ஒதுக்கியபடி...
மழை வலுக்கிறது..
நடக்கிறேன் கால்கள் சேற்றில் புதைய...
தலை வெட்கிகுனிந்து மெதுமெதுவாய்
அவன் அருகில் போக...
மழை இன்னும் வலுத்து...
அதையும் தாண்டி ஆரவாரம்...
கரகோஷம்...
முரசும் இணைந்து...
கண் நிமிர்ந்து பார்க்கிறேன் நாணசிரிப்புடன்...
மேடையில்
அவன் கை பற்றி சாந்தா....
மழை இப்போது வெகுவாய்...
என் தந்தை முகத்தில் பெருமிதம்
என் தாயோ தோற்றவளாய்
என் சகோதரி பரிசுபுதையல் வென்றது போல்
என் ரிஷ்யஸ்ருங்கன்
இன்னும் அதே குழந்தையின் வியப்புடன்....
அடைமழை...
நொடிநேரத்தில் நின்ற இடம் வெள்ளக்காடாய்...
அது வரை ஆர்ப்பரித்த கூட்டம்
அங்குமிங்குமாய் ஓட...
வேரறுந்து நான்...
ஜனத்திரளில் மறைந்து போனேனே...
இடித்து தள்ள
மறைகிறேன் கால்களின் நடுவே...
முதல் மிதி அடிவயிற்றில்
அவன் என்னை புணர்கிறான்...
சேற்றில் புதைகிறேன்
ஓடும் கால்களின் தெருவாய் நான் மாற...
வலிகளின் தாக்கம்...
மின்னல் வெட்டுவது கண்ணில் பட
நினைவில் அவன் என்
மார்பு பற்றி இதழ் பதித்தது...
எங்கோ இடி இடிக்க
அவன் வெப்பமுனகல்
என் காதருகே தீனமாய்...
யாரோ மிதித்ததில் என்னுளே ஏதோ நொறுங்க
முதல் முதல் என் பெண்மை அவன் எடுத்த நொடி
மெதுமெதுவாய் அடங்கும்
என் உயிர் வலியில்...
கடைசியில் நினைவிருப்பது
என்னுள் நுழைந்து என்னுள் கலந்து
என்னுள் கரைந்த காமவேதனையில்
அவன் சொல்லியது...
" நீ பிரிந்தால், என் அன்பே! நான் இறப்பேன்..."
இப்போதும் வருகிறது
ஒரு சின்ன சிரிப்பு
கடைசியில் என் தோழி மட்டுமே என்னோடு!
மறித்து தான் போனேன்
மண்வாசத்துடன் என் வாசமும் கலந்து...
நான்
வைஷாலி!!!