Saturday, December 14, 2013

இரைச்சல்!!


லட்சம் லட்சம் குரல்கள் பிறந்து வளரும்
தோட்டம் சூழ்ந்த வீடு அது!
விதி தூவலால் விதைந்து முளைக்கும் குரல்கள் அவை!
விழிநீர் கசிவில் செழிக்கும் கிசுகிசுப்பு கரும்பொதிகள்!
சிறு மூட்டையாய் பிறந்த குரல்களுக்கு
மெல்ல உடல் சிலிர்த்து கை கால் முளைக்கிறது!

நீ தோற்கிறாய்! நிச்சயம் தோற்பாய் பெண்ணே - ஒரு குரல் !
இன்னொரு குரல் வளைய வந்தபடி சொல்கிறது
உன் இருட்டை நான் நன்கு அறிவேன் என்று மெல்ல இளித்தப்படி!
குழையும் இன்னொரு குரல்  ரத்த பசியோடு
நீ இது தான்! இவ்வளவு தான்! ஒன்றுமே இல்லை என்கிறது!
நீ மெல்ல கரைந்து காணாமல் போவாய் எங்களுள்
என்கிறது பழிக்கும் ஓங்காரமான குரல்கள்!

அவளும் தினம் அடைக்கிறாள் அவள் வீட்டின்
கதவு, ஜன்னலோடு சேர்ந்து ஒவ்வொரு விரிசலையும்!
வளரும் குரல்களின் இரைச்சலோடு தினம் யுத்தம்
அவள் உள்ளே!

நான் அவளில்லை! நான் அது இல்லை! நான் வேறு!
என்று சொல்லும் அவளுடைய ஓசை அலறி அலறி
அடங்க யத்தனிக்கும்!
அவள் வீட்டின் சுவர்களை சுரண்டியும் பிட்டும் பிராண்டியும்
உணவாக்கி குரல்கள் வீட்டை சூழ்ந்து நிற்கும்!
நேரம் நீள, சுவர்கள் மடிந்து குரல்களுக்குள்  நிரம்ப
அவளும் கரைந்து தான் போகிறாள் அவற்றோடு
மீண்டும் ஒரு தோட்டமும் வீடும் பிறக்கும் வரை!!!