Friday, May 13, 2011

கறையாகி கரைகிறேன்!!!

சொல்ல நினைத்து சொல்லாமல் விடுபட்டவை
படபடக்கிறது கண்ணீருக்குள்!
கேள்வி குறிகளை மேலே வைத்து பறந்துவிடாமல்
பார்த்து நிற்கிறேன் என்வீட்டு கூரையை...
கடந்து வந்த காலத்தின் கருமை மேனியில் படர்ந்து
நானும் நிற்கிறேன் இப்போதெல்லாம் நிழலாய்!

உன்னிடமும் அல்லாது வேறு யாரிடம் கொண்டு சேர்ப்பது
என் பயத்தின் நரம்பால் பின்னிய மூட்டையை!
அதற்குள் கிடப்பது கடந்து வந்த காலத்தின் தடயங்கள் தாங்கி
நரையும் மூப்பும் கலந்து தழும்பாகி போன ஒரு நான்!
முதன்முதல் உன்னை பார்த்தப்பின் மெல்ல
உரித்து போட்டேன் அந்த என்னை..
இப்பவும் அணிந்து கொள்ள சொல்லி கெஞ்சுகிறது
மெல்ல மூட்டையின் உள்ளிருந்து!

உன்னோடு இல்லாத பொழுதுகளில்
வந்து சேரும் பயம் கலந்து முதுகில் சுமக்கும்
பொதி வளர்ந்துகொண்டே இருக்க...
உன் கண் பார்க்க நேரிடுகையில் இறந்து பூக்கிறது!

எங்கு தொடங்கி எங்கு முடிந்ததோ
தெரியாது தேடுகிறேன் என் பகலை!
வருடங்கள் தாண்டி சென்றதில் எங்கோ
தொலைந்திருக்கக்கூடும் வெளிச்சம்...
வலிமட்டும்தான் இருப்பதன் ஒரே உணர்வாகி இருக்க
எங்கிருந்து வாழ்க்கையை திருத்தி எழுத
என்று தெரியாது விழிக்கிறேன்.

தினம்தினம் பிறக்கும் என் உடலோடு என் மனது
ஒன்றுபடாத வினாடிகளில்
விகாரங்கள் கட்டித் தழுவுகிறது...
நிழலுமாகி கறையுமாகி
கரையும் வேளைகளில் மட்டும்
இறந்து போகிறேன்...
மீண்டும் உன் கண் பார்க்கும்வரை!