Tuesday, January 5, 2010

புதிய பிறவிகள்...




இந்தியா சென்று வந்தது மனதெல்லாம் இன்னும் வருடியபடி இருக்க... மிகவும் யோசிக்க வைத்த விஷயங்கள் பல இருப்பினும், அதிகம் சிந்திக்க வைத்தது என் ரயில் பயணங்கள்... அரக்கோணம் எனது சொந்த ஊர். பிறந்து வளர்ந்த மண். கிராமமும் அல்லாது, நகரமும் அல்லாத ஒரு இடை நிலை. இன்னமும் வாசலில் உட்கார்ந்து போக வர உள்ளவர்களின் நலன் விசாரிக்கும் பெருசுகள் உண்டு. ஆனால் முன்பு போல் இல்லை. மார்கழி மாதம் கோலம் போட்டாப்போட்டியோடு நடந்தது நினைவில் உண்டு. இன்றோ பல வீடுகள் முன்பு சிறிய ஒரு நட்சத்திரம்... பார்ப்போர் அனைவரின் கையிலும் ஒரு தொலைப்பேசி. தெரிந்த மனிதர்கள்கூட ஏதோ ஒரு உரையாடலில் மூழ்கி மிதந்தபடி இருக்க, வெறும் ஒரு தலையசையில் நானும் உன்னைப் பார்த்துவிட்டேன் என்பதற்காக ஒரு அங்கீகாரம். இப்படி பல பல....

என் ரயில் பயணங்களுக்கு வருவோம். சென்னையை நோக்கி செல்ல ஒரு இரண்டு மணிநேரம் பிடிக்கும். வரும் ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்று நின்று செல்லும். பலத்தரப்பட்ட மக்களை சந்திக்கலாம். எனக்கு மிக பிடித்த விசயம். FM வழியே காதில் இளையராஜா குழைந்து நெஞ்சை வருட, நான் வேலை பார்த்து வசிக்கும் ஊரில் தெருவில் நடந்தால் பார்க்க நேரும் அதே கருப்பு, நீலம், வெள்ளை போன்று அல்லாது, பார்க்கும் இடம் எல்லாம் வெவ்வேறு வண்ணம். நடுநடுவே வேர்க்கடலை, இஞ்சிமரப்பா, நெய் பிச்கேட், சூடான சமோசா இப்படி பல பல... காலை நேரங்களில் ரயிலில் செல்ல நேர்ந்த போது கண்டது பெண்கள் கூட்டம். படிக்க செல்லும் இளசுகள் ஒருபுறம் இருக்க. ஒரு 80 சதவிகிதம் பெண்கள் வேளைக்கு செல்லும் பெண்கள்.

தினம் தினம் ரயிலில் செல்வதால் கூட்டம் கூட்டமாய் அடித்து பிடித்து ஒரே இடத்தில் அமர்ந்து மெல்ல நேற்றைய நிகழ்வுகள் அசைபோடும் சினேகங்கள். குளித்த தலை ஈரம் துடைக்க கூட நேரம் இல்லாது ஒடி வரும் கூட்டம். மெல்ல ரயில் நகர காலை உணவு பகிர்ந்தபடி தொடங்கியது இவர்கள் பட்டிமன்றம். வெகு நாள் ஆயிற்று கூட்டத்தின் மத்தியில் இருந்து. கண் நிமிர்ந்து பார்த்தேன் ரயில் முழுக்க உள்ள முகங்களை. எல்லார் முகத்திலும் ஒரு கலவையான உணர்ச்சி. கொஞ்சம் அசதி, எரிச்சல், தூக்கமின்மை, கோபம், சுயபச்சாதபம், ஏக்கம், வெறுப்பு எல்லாம் வேறு வேறு விகிதத்தில்.

பேச்சு முழுக்க என்ன காலை, மதிய உணவு செய்தனர், எத்தனை மணிக்கு உறங்கினர், எப்போது எழுந்தனர் என்று தொடங்கி மெல்ல கணவன்மார்கள் பக்கம் திரும்பியது. தம்தமது துணைவர்கள் பற்றி பேசும் சமயம், முகத்தில் வன்மம். கொட்டி குமுற கிடைத்த ஒரே இடம். பேசினார்கள். பேசினார்கள்... பேசிக்கொண்டே இருந்தார்கள். சில கணவர்கள் வேலை இல்லாது, சிலர் பொறுப்பு இல்லாது, சிலருக்கு வேறு பழக்கங்கள், சிலர் காசுக்காகவே. இப்படி பேசியதில் புரிந்துக்கொண்டேன். முக்கால்வாசி பெண்களிடம் காதலே இல்லை. இணக்கம் இல்லை. கடமைக்காக துணைகளுடன் இருக்கின்றனர். ஒவ்வொரு முகமும் பார்க்கும் போது எங்கேயோ தொலைந்து போனவர்கள் போன்று, முகம் இருகி கடினமாய். இந்த கூட்டம். சிலர் நடந்த சண்டை அடிதடிகள் பற்றி சொல்ல, குழந்தைகள் மாமியார் மாமனார் நாத்தனார் ஒரகத்தி என்ற ஏனய சங்கதிகளும் பேச்சில் தடம்புரண்டது...

ஒரு அளவிற்கு மேல் மனது வலித்தது. நமக்கிருப்பது ஒரு சிறிய வாழ்க்கை. விவேக் சொல்வது போல ``இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்``. இதில் தான் எத்தனை வழக்குகள். இப்படி யோசித்தே நசுங்கி கசங்கி சென்னை வந்து சேர, சில நண்பிகள் சந்தித்தும் தொலைபேசியில் உரையாடியும் சில விஷயங்கள் தெரிந்தது. பெரிய பதவிகளில் இருக்கும் பெண்களும் மிக மனம் நொந்து பேசினார்கள். பேச்சின் சாரம்சம் நான் ரயிலில் கேட்ட அதே தான். பணம், அந்த்ஸ்து, நல்ல வாழ்க்கை நிலை என்று இருந்தும் நிம்மதியில்லை. என்ன தான் நடக்கிறது என்று மெல்ல யோசித்தேன். நண்பர் செல்வாவிடம் சிறிது நேரம் facebook வழியே பேசமுடிந்தது. நெஞ்சு பொறுக்காது அவரிடம் as usual புலம்பி சோக violin வாசித்தபோது சொன்னார், இது இப்போது உள்ள எல்லா ALPHA FEMALE களின் நிலை என்று.

அமைதியாய் பின்னோக்கி பார்க்கையில் புலப்படுகிறது சில விஷயங்கள். முன்பெல்லாம் அதாவது குகைவாசிகளாக சிக்கி முக்கி கல்லோடு நெருப்பை கண்டுப்பிடித்து இருந்தபோது ஆண்கள் கூட்டமாக சென்று வேட்டையாடி வருவார்கள். குகையில் பெண்கள் குழந்தைகளையும், உணவு, பராமரிப்பு இவைகளை மேர்பார்வை பார்த்தனராம். இன்று பெண்கள் படிப்பு, வேலை, குடும்பம் என்று எத்தனை விஷயங்களை ஒரே சமயத்தில் செய்கின்றனர். 70% ஆண்கள் (மன்னிக்கவும்) வேலையில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒட்டுண்ணிகளாய் தான் இருக்கிறார்கள்.

மனதிற்கு இணக்கம் இல்லாத கணவன் கிட்டினால் வாழ்வு நரகவேதனை தானே. எரிமலைகள் மேல் கணவனும் மனைவியும் அமர்ந்துக்கொண்டு, வெடிக்க யத்தனித்து, இந்த கொடுமையில் குழந்தைகளும் பெற்றுக்கொண்டு, மேலும் மேலும் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டு, ``அடக்கடவுளே!``. இந்த சூழ்நிலை ஒரு பெண்ணிற்கு எந்த விதங்களில் பாதிக்க நேரும் என்று தனியே எழுதுகிறேன், என் கருத்துகளை.

இதற்கு என்னத்தான் தீர்வு... உறவுகள் வெட்டியெறிய வேண்டியதில்லை. ஆனால் எதாவது செய்து இந்த பாவப்பட்ட பெண்களின் மனதிற்கு ஆறுதலும் உறுதுணையும் அளிக்கமுடிந்தால் இவர்களின் வாழ்வுநிலை கொஞ்சமாவது மேம்படும், அதற்கு என்ன செய்வது என்றும், எங்கு தொடங்குவது என்றும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.