Wednesday, January 6, 2010
காயசண்டிகை ஆகிய மணிமேகலை...
ரத்தம் படிந்த கைகள் காஞ்சனன் உடையது....
ரத்தம் தோய்ந்த நினைவுகள் என்னுடையது....
ரத்தம் உறைந்து மறுத்த உடல் உதயகுமரனுடயது...
எத்தனை முகம் கடந்து இருக்கிறேன் இது வரை...
எத்தனை கண்ணீர் துளிகள் கண்டு இருக்கிறேன் இது வரை...
அழகும் சிரிப்பும் அர்த்தம் இல்லாமல் ஆனது எப்படி..
நினைவில் நிற்கும் அம்மாவின் முகம்
இப்போது மழித்த தலையுடன்...
அவள் நீண்ட கருமையான கழல்
எனக்கு மிக பிடிக்கும்...
மூலிகையும் வாசமும் அவள் மணமும்
சேர்ந்து ஒரு கலவை அவள் மேல்...
தந்தை நினைவில்லை...
இறந்தார் அரசகட்டளையால்
என்று கேட்ட நொடி
என் தாய் அழகிழந்தாள்....
நொடிகொரு முறை சொல்வாள்
நான் கண்ணகியின் மகள் என்று...
அழகுக்கு மாதவி என்ற நிலை மாறி
இப்போது துறவறம் ஏந்தினாள்....
சுதாமதியுடன்...
அமைதியை வேண்டி...
புத்தனின் யோனிகளும் லிங்கங்களும் இல்லா பாதை
அவள் அலைபாய்ந்த மனதுக்கு
வழியை காட்டியிருக்க வேண்டும்...
தடம் மாறும் வயது எனக்கு...
தெளிவில்லை....
கவர்ச்சியானவள் இவளும்...
நாட்டியம் படித்தாள்...
ஜோதிடம் பார்ப்பாள்...
மணிமேகலையின் பாடல்
காதுக்குள் ஓயாமல் ஒலிக்கும் என்று கூறியவன்
உதயகுமாரன்...
ஆசையா... காதலா... காமமா...
என்று பிரித்தெடுக்க இயலாத
கண் அவனுடையது...
திகட்டும் நறுமணம் சிறிது நேரத்தில்
மூச்சடைக்க வைக்கும்...
எது வேண்டும் என தெரியாத நிலையில் நான்....
இது தான் உனக்கு என்று திணிக்க தயாராய் அவன்....
ஏற்க தான் இருந்தேன் அவன் கைகளை...
வழி இது என்று சொல்ல ஆள் இல்லாத நிலையில் நான்...
தண்டை மாற்றியதாம் என் தாயின் வாழ்வை...
இன்று கூற ஒன்றும் இல்லை என்று
வெற்றுபார்வை பார்க்கிறாள்....
எது என் பாதை கலங்கி போய் தான் இருந்தேன்.....
கண் விழித்து பார்க்கையில் தாய் மணிமேகலை
மாற்றி இருந்தாள் நான் நிற்கும் நிலத்தை...
மணிபல்லவதீவாய்!
சென்ற பிறவிப்பயனடி...
நீ செய்யவேண்டிய காரியங்கள் பல உண்டு! என்கிறாள்
தனியே விட்டு சென்றே விட்டாள்...
நடக்கிறேன்!
அழகாய் ஒரு பெண் என் முன்...
சிரிக்கிறாள் தேவதையாய் அமைதி வருட!
திவதிலகி அவள் பெயராம்...
போக சொல்கிறாள்
ரத்னதீபத்தின் தாமரைதடாகத்திற்கு!
ஆவுபுத்திரனின் அமுதசுரபிக்காக...
ரிஷபத்தின் முழுநிலவில் வெளிவரும் கிண்ணமாம்
தர்மநெறி தவறாதவர் கையில் மட்டும்
வந்து சேரும்...
போய் வா... பசியாற்று...
என்றவளும் மறைந்தேவிட்டாள்.
சென்றேன்... சுற்றி வந்தேன்
அழகிய நிலவொளியில்
சில்லென்ற நீர் பறைசாற்றும்
நான் எங்கெங்கு அழகு என்று...
தாமரை இதழ்கள் தொட்டு பார்த்து
சிணுங்கி விலகி செல்கிறது குழப்பப் பொறாமையில்...
ஒரு புதிய மலரின் தடாக வருகையால்...
என்ன தான் நடக்கும் தெரியாது நான்...
நீர் விலகி மேல் எழும்பும் கிண்ணம்
கையை நோக்கி வர...
எடுக்கிறேன் அறியாது
இனி என் பாதை திசைமாறும் என்று!
வந்த வழியே சென்றேன்...
அரவனரின் மொழி கேட்க...
தோள்களில் எத்தனை பெரிய பாரம்...
மக்களின் குறை தீர்க்கும் பிக்குணி
இவளாம்... இனி...
பசியின் வேர் பிடுங்கி
மக்களின் ஊடே இவள் பிரயாணம்...
யானை பசியோடு வந்தவள் ஒருத்தி
காயசண்டிகை!
சோற்றமுதம் தந்து
கண்ணீர் துடைத்தேன்...
காதல் மறந்தது...
கடமை புரிந்தது
உதயகுமரன் தவித்து தான் போயிருந்தான்...
பின் தொடர்கிறான் இன்னமும்
காதல் அவனிடம் சிக்கி திணறி போய்...
மனம் வலிகளை மட்டுமே பார்த்ததில்
கண் குருடாகி அகம் ஒளிர நிற்கிறேன் அவன் முன்...
இவன் திணிப்பு இப்போது உணர்கிறேன்
சலனம் மறைந்த உதட்டைக் கொண்டு!
மழித்த தலையும் உடலை மறைக்கும் துறவறம்
தாண்டியும் அவள் பெண்மை அவனை வருடியது...
இல்லை என்ற வார்த்தையை அகராதியில் காணாதவன்
இணக்கம் என்று இறுக்குகிறான் என் வாழ்வை...
அவனை மாற்ற வழி இல்லாததால்
இவள் மாறி தான் போனாள்
காயசண்டிகையாய் உருவத்தில்...
காஞ்சனன் காண்கிறான் என்னை!
வெகு நாள் கழித்து காண்கிறான் அவன் துணையின் உருவை...
இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு..
பெரும் பசியோடு விலகி சென்றவளாயிற்றே!
விளக்கங்களுக்கு நேரம் இல்லாதவளாய்
காஞ்சனன் முன் வாய் அடைத்து நான்...
மாறியது அவன் கோபம் உதயகுமரன் மேல்
மாற்றான் மனையை கொண்டான் என பெருங்கோபம்
விழிநீர் தரைதொடும் முன்
இறந்து தான் போனான் உதயன்
வசீகரத்துடன் காதல் தீய்ந்து
தரைமுழுதும் அவன் ரத்தம் தோய...
ரத்ததுளிகள் படிந்த நான் என் உருக்கொள்கிறேன்
மீண்டும் நானாக..
காஞ்சனன் கண்கள் குற்ற உணர்வில் கறுத்து...
மனம் லயிக்காமல் கால் மெதுவாய்
அழைத்துப்போக...
மரம் ஒன்று நிழல் தர அமர்கிறேன்
கண்முன் காட்சிகள் மாற
எத்தனை நாள் முன் உறங்கினாள் என்பதை மறந்து...
அயர்ந்து விழிமூடி நொந்தாள்
வறண்ட கைதொட இமை திறக்கிறேன்
தள்ளா முதுமை பசியோடு அவள் முன்
கையேந்தி!
இத்தனை பிராயாங்கள் தாண்டி ஒன்றும் இல்லாது
நிற்கும் உயிர்கள் கண்டு
என்னுள் இருந்த இறுதி கயிரும் அறுந்து போக
நிமிர்கிறேன்...
இது வரை போர்த்தி இருந்த சுவர்கள் மெல்ல
விலகி முதன்முறை உணர்கிறேன்
என் நிர்வாணம்...
தூசாகும் நிஜங்களின் முன்
என் பணி நிதர்சனமாய்...
பசி போக்கும் சுரபி கையெடுத்ததில்
மனதில் என் பாதை தெள்ள தெளிவாய்...
பெரும் கடமை பசி கொண்டு
காயசண்டிகை போல் ஆகிய மணிமேகலை
நான் நடக்கிறேன்
பிணிகளின் ஊடே...
Subscribe to:
Posts (Atom)