Saturday, July 6, 2013

முதன் முதல்!!!


எல்லா கணங்களும் நினைவில் எப்போதும்
நிலைத்து போக ஓடுகிறது
ஓட்ட பந்தயம் ஒன்றில் நேரத்திற்கு எதிராக!

கருமுட்டையை  தொட்டு விட
முட்டி மோதி விரையும் லட்சக்கணக்கான விந்தணு போல!
நீர்த்துளிகளை கலந்து கட்டி
உடைந்து தெறிக்கும் ராட்சத நீர்வீழ்ச்சி போல!

விகாரமானவை எல்லாம் அழகாகிறது
உடைந்து அழுகி போகும் சாதாரணங்களில்!!

இறந்து போனவர் இன்றி கழிக்கும்
முதல் பிறந்த நாள் பெரிதா
திருமண நாள் பெரிதா
இறந்த நாள் பெரிதா
என்று தராசு முள் எங்கோ 
ஒருத்தியின் மனதில் கணித்துக்கொண்டிருக்கிறது!
ஆனாலும் உறைந்து போகும் கணங்கள்!!!

ஒவ்வொருவரின் முத்தங்களும்
எப்படி தீர்மானித்து அடுக்கப்படுகிறது
மூளைக்குள்!!!
கொடுக்கும் முகமா, 
அது கிளரும் நெருப்பா,
மறைந்து போகும் உறவுகளா?
ஆனாலும் உறைந்து போகும் கணங்கள்!!!

இருக்கும் போது போய்விடாதா என்றும்
போன பின் இருக்கக்கூடாதா என்றும்
புரட்டி போட்டு கொண்டே போகும் 
வன்மமும் காதலும்
உண்மையும் பொய்யும்
புணர்ந்து 
உறைந்து போகும் கணங்கள்!!!

வார்த்தைகளும் இடமுண்டு 
இந்த நினைவு கல்லறையில்..
அடக்கம் செய்வதால் தானே உறைந்து போகிறது!!!
அழுக விட்டால் கறைந்து காணாமல் தானே போகும்!!!

இறந்து போகும் அப்பாக்களின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் அம்மாக்களின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் கணவன்களின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் மனைவிகளின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் குழந்தைகளின் வார்த்தைகளும்!! 
இப்படி அடுக்கி கொண்டே போகும் இவைகளும்
முண்டிக்கொண்டே இருக்கிறது
நினைவுகளில் சிக்கி கொள்ள!!!

ஒவ்வொரு நினைவிற்கும் வளர்ந்து சுருங்கும்
மனதும் மூளையும் 
மாற்றிக்கொண்டே 
இருக்கிறது
முகத்தை!
முதன்முதல் என்பதன் அர்த்தங்களை போலவே!!!