Saturday, January 16, 2010

அசோக வனங்களும் ராதையும்!!!



ராதையாய் சீதையாய் எழுதி பார்க்கிறேன்
புதிய சகாப்தங்களை...
சூர்ப்பனகைகளும் மேனகைகளும்
எனக்குள் அடங்கித்தான்
யாதும் ஆகி நிற்கிறேன்;
என் பிரிவினைகளுடன்!
ஆயிரம் கரமும் காலும் நாக்கும் முளைத்து!
கடவுளா காமுகியா தேவதையா பெண்ணா...
நான் யார் இதில் உங்கள் பார்வையில்...

இதிகாசங்களின் பக்கங்கள் தொடங்கி இன்றைகள் வரை
எங்களின் வித்துக்களும் அதன் முடிச்சுகளும்...
நான் வசிக்கும் பட்டியின் தடுப்பாய்
உங்கள் சட்டங்கள்....
எது சரி எது தவறு என்று இனி
முடிவெடுப்போம்....
தராசுகளை உங்கள் கையில்
இருந்து பிடுங்கி...
போதும் ராமர்களுக்கும் கிருஷ்ணர்களுக்கும்
நான் காத்திருந்த நிமிடங்கள்...

அக்னிப்பரிட்சைகள் அலுப்பாய் இருக்கிறது!
காதலாய் காத்திருந்து அசதி தட்டுகிறது!
புரட்டு புராணங்களும் மார்த்தட்டும் வீர வசனங்களும்
வெட்டித்தான் போடுகிறது
எஞ்சிய தனங்களை...
மாதமொரு முறை மாறும் சமூகநெறி
மாறாமல் ஏற்றும் இதயத்தில் படிமத்தை...

பாதிநேரம் உங்கள் பல்லிடுக்குகளில்
சிக்கி என் கற்பு காரை தான் படிகிறது...
விமர்சன வரைமுறை கோடுகள்
உங்கள் நாக்குகள் தாண்டி எம் படுக்கையறைவரை!
தடித்த பேச்சுகளில் பொசுங்கி போயே விட்டது
எஞ்சி இருந்த கருணையும்...

பெண்ணெனில் இப்படி தான் இருத்தல் வேண்டும்
என பழுத்த கல்வெட்டுகளை கழுத்தில் மாட்டி,
விழிமுட்டும் ஏனைய உயிர்களுடன்
தாயாய், தாரமாய், தாசியாய் மாறி
இனி கால் பதித்து நிற்க தரைகள் அற்று
வேரருந்து மிதக்கிறேன்
என் சுயங்கள் கிழிந்து!

ஏகாந்தங்களும் மந்தகாசங்களும்
புத்தகஏடுகளில் மக்கிப்போக...
ஊழிப்பெருக்காய் கண்ணீர்
மாராப்புகளை அடித்துப்போக...
கனவுகளாய் நிஜங்களும்
நிஜங்களில் நினைவிழந்தும்
தவித்து போகிறது உயிர்பரப்பு...

நா உலர்ந்து போகிறது...
பெண்ணியங்களும் உடலரசியல்களும்
பேசி பேசி...
என் அன்பு ராமரே!
என்னை அக்னிகுண்டத்தில் ஏற்றும் உன்னகத்தே
இன்று என்ன கேள்வி?
நன்கு தெரியும் எனக்கு ...
சோரம் போனது என் உடலா என் மனமா...
இது தான் அல்லவா
பதில் எதுவாய் இருப்பின் மனம் அடங்குவாய் நீ...
இன்றைய என் பதில் சஞ்சலம் தீர்ப்பினும்
உன் நாளைகளில் புதிய கேள்வியுடன் நீ நிற்பாய்
அது சாஸ்வதம்...

கோகுலமோ அயோத்தியோ எனக்கு வேண்டாம்
அங்கீகாரம் கொடுக்கும் பெயரோ வேண்டாம்...
தனிமைகளில் வெதும்பி கற்பனையில்
என் நாட்கள் ஓட...
நான் நடக்கும் இன்றைய பாதையில்
நேற்றைகள் இருளாய் படிய
நாளைகள் முள்ளாய் அவதணிக்க
வெளிச்சம் தொலைந்த விண்மீன்கள்
மட்டுமே துணையாய்...

சிரிப்புகளின் ஊடே நிர்ச்சலனங்களற்ற
என் பாதுகாக்கப்பட்ட கடந்தக்கால வெளிகள்...
கால்கள் தாண்டி ஓடிய பட்டாம்பூச்சி வாழ்க்கையை,
யாருமற்ற அடர்தனிமையில் உதிரும் மயிர்களின் ஊடே
எண்ணித்தான் பார்க்கிறேன்!
ஒன்றுமே அற்ற சூனியத்துக்குள்
இருந்து விடுபட
அசோகவனத்தில் ஒதுங்குகிறேன்
மாளிகைக்கு மயானங்களே மேலென்று!