Wednesday, November 25, 2009

அடுத்த நிறுத்தம்... விடியல்!

கண் எரிகிறது...
நெஞ்சும் கூட சேர்ந்து கனலாய்...
வயிற்று பசி இதன் முன் வெகு லேசாய்...
எஞ்சியது வெறி மட்டுமே...
சாதிக்க!
ஜெயிக்க!
நிரூபிக்க!
கானலாய் என் நிகழ்காலம் எரிய
என் எல்லாமும் அதில் பொசுங்கி...
எதிர்காலம் என் முன் சம்மணம் இட்டு...

காறி உமிழ்ந்த எச்சில்களின் தாக்கத்தில்
உழன்றிருக்கிறேன்...
வீசி எறியப்பட்ட அலட்சிய பார்வைகளின்
அறை வாங்கியிருக்கிறேன்...
அவமான வார்த்தைகளின் சவுக்கடி
ருசி பார்த்திருக்கிறேன்...
நட்பாய் எண்ணி நம்பி வாங்கிய
துரோக முத்தக்குவியல்
சேர்த்து வைத்திருக்கிறேன்...
சொந்தங்கள் ஓரமாய் ஒதுங்கி நின்று
கைக்கொட்டி நகைக்க தயாராய் இருக்க
நான் மட்டும் ஒற்றையாய்...

மூழ்கும் புதைமணலில் மூழ்கி
தத்தளித்த கைகளில் ஒன்றுமே
சிக்கவில்லை
என் நேற்றைய பொழுதுகளில்...
வெற்று காகிதம் ருபாய்...
ரத்தமும் சதையையும்
அநியாய விலைக்கு தராசில்
விலை போடும்...
அன்பையும் ஆசைகளையும்
கழிவாய் தூக்கி போடும்...
அவை நிர்ணயிக்கும்
யார் வென்றவர்...
யார் தோற்றவர்...

என்னை நிறுத்த என் விதிக்கு
வலுவில்லை...
நான் எழுகிறேன்
நான் நிற்கிறேன்...
என்னை பார்த்து சிரிப்போர் முன்...
போரில் வீழ்ந்தது உண்மை தான்...
விழுந்தேன் பல முறை
விழுப்புண்கள் பல தாங்கி...
காயங்கள் புரையோடும்
சிரிப்பவரெல்லாம் முன்பின் போர்க்களம்
ஏறாத அமைதியான கோழைகள்...

இன்னும் வாழ வெறி மட்டுமே
மூச்சாய்....
இதயத்துடிப்பாய்...
என் கூச்சங்கள் பயங்கள்
தனிமைகள் கேள்வி குறிகள்
கொன்று தின்று
ஓடி கொண்டே நான்...
மெது மெதுவாய் வாழ்க்கை
வெளிச்சம் தலை நீட்டும்
நன்று அறிவேன் இந்த நொடி
என் அடுத்த நிறுத்தம்
விடியல்....
நிற்கும்
வெற்றி ஏந்தியபடி ..