Saturday, January 12, 2008

என்னுள் என் வேர்!!!

வேர்
எல்லாரிலும் உண்டு!
சில வேர் நுட்பமாக
சில வேர் தடித்து
சில கறுத்தும் காய்ந்தும்
மிக சில இன்னும் பச்சை விடாது
இப்படி பலப்பல...

என்னுள் ஓடும் வேரின் தன்மை
இன்னும் புலப்படவில்லை!
பித்து போல இன்னும் மண்ணை
தோண்டி கொண்டே இருக்கிறேன்...
இரவும் பகலும்
ஒவ்வொரு நொடியும்
தோண்ட தோண்ட ஏனோ
ரத்தமும் கழிவும் கை முழுக்க...

ஆனால்!
என் தேடல் இன்னும் நிற்காது
என் ஆழம் நோக்கி!

ஒரு விநாடி பறித்து இளைப்பாறுகிறேன்!
கையின் நகங்கள் ஓடிந்தும் பெயர்ந்தும்...
காயங்களுடன் விரல் நுனி இதய துடிப்புடன்!
ஒரு வேளைநான் வேரற்ற ஜாதியோ?
விண்ணில் மிதக்கும் விண் கல் போல...

என்னுள் நானே கேட்கிறேன்
எப்போது தொலைந்தது என் வேர்?
இல்லையே
முன்பு கண்டு இருக்கிறேன்
இதே இடத்தில்
எப்போது தொலைந்ததோ தெரியவில்லை?

பசிக்க வேறு செய்கிறது!
கை உடம்பு முழுக்க என் தவறின் கழிவுகள்!!!
எப்போது வேர் கண்டு பிடித்து
எப்போது சுத்தமாகி
எப்போது என் பசியாற?
வேரின் நுனி வரை தேடுவேனோ
அல்லது
வேர் ஒன்று உண்டு என்னுள் என்று
கண்ட நேரம் அமைதி ஆகுமோ
சுற்றி சுற்றி அலையும்
என் பித்து இதயம்...