Saturday, March 1, 2008

போரில் நான்!!!

என் பூமகனே!
நான் செய்த புண்ணியம் நீ என்னுடையதானாய்!
ஆனால் நீ செய்த பாவமோ நான் உனக்கு தாயாய்!
எத்தனை எத்தனை தழும்புகள் உன் மனதில்
இந்த ஐந்து வயதுக்குள்!
மழலை சிரிப்பில் மூழ்கி விளையாடும் பருவத்தில்
உனக்கோ என் கண்ணீர் துடைக்கும் வேலை!
எனக்கு கிட்டிய அழகு குழந்தை பருவத்தை
உனக்கு கொடுக்க இயலாது நான்!
ஏனோ நீ ஒற்றை மரமாய் நிற்க நான் காரணமானேன்!
என் தவறுகளின் தண்டனை உனக்கு...

இதோ விடை கொடுக்கிறேன் மீண்டும்
ஒரு கோடி மன்னிப்புடன், என் இதயம் சிதைந்து
உன் முன்!
உயிரே பிசையும் வலி...
உன் கண்ணின் ஒவ்வொரு துளிக்கும்!
இன்னும் எத்தனை வேதனை நீ சகிக்க,
நான் காண வேண்டுமோ!
என் எதிரிக்கும் வேண்டாம் இந்த நரகம்
என் வாழ்க்கை பாதையை அழித்து அழித்து
எழுத சத்தியமாக ஆசை இல்லை எனக்கு!
உன் கண்ணீர் அடக்கி என் கண்ணை துடைக்கும்
உன் பட்டு விரல்கள்!
எத்தனை முதிர்ச்சி உன் கண்ணில்!!!

ஒரு அடி முன் வைக்க, பத்து அடி பின் வழுக்கி
இதோ திரும்ப தொடக்கத்தில் இருந்து என் ஓட்டம்...
நாளை கண் விழிக்கும்போது உன் முடி கலைத்து
முத்தமிட்டு எழுப்ப நான் இல்லை!
என்மேல் விழுந்து பிரண்டு, உன் யானையாய் மாற்றி
உன் பஞ்சு மூட்டையாய் மாறி,
கண்ணாமூச்சி ஆட நான் இல்லை!
மின்னல் வேகத்தில் குளிப்பாட்டி, உடை உடுத்தி,
ஒரு பக்கம் இட்லியும் சக்கரையும் ஊட்டி,
காலனி பூட்டி, பள்ளிக்கு அனுப்பி
புயலடித்து ஓய்ந்த அமைதியை உணர நான் இல்லை!
பள்ளி முடித்து நீ வரும் வழி பார்த்து
ஓடிவரும் உன்னை சேர்த்தணைத்து தூக்கி
உன் திராட்சை விழிகள் விரிய நீ சொல்லும்
கதை கேட்க நான் இல்லை!
இரவு உன்னை கட்டி பிடித்து
கதை சொல்லி உறங்க வைக்க நான் இல்லை!

இத்தனை கொடுமை நான் செய்தும்
விழியில் ததும்பும் நீரோடு, உன் ஈர முத்தத்தில் நனைத்து
என்னை பத்திரமாக இருக்க சொல்லும்
என் ஐந்து வயது தெய்வமே!
இனியாவது உனக்கு விடியல் கிடைக்க
இதோ என் தனிமை பயணம்!
என் வேண்டுதல் எல்லாம் எப்போதும்
உனக்காகவே!
எனக்காகவும் உண்டு ஒரே ஒரு வேண்டுதல்
இனி ஒரு ஜென்மம் இருந்தால்
நானே உன் தாயாய் வரவே அது...
அப்போதாவது ஒரு நல்ல அம்மாவாய் இருக்க!