Saturday, February 13, 2010

விளிம்பில்...




கேட்கிறாய் நீ
ஊஞ்சலில் பயணித்தது உண்டா என்று...
கண்மூடும் இந்நொடி நான் பறக்கிறேன்!
மேகம் நோக்கி போகையில் பிரார்த்தனை..
வானம் அடைந்து ஊஞ்சல் அங்கேயே நின்று போக!
நான் பறக்கும் என் வானம் முழுக்க
விழுதுகளாய் கயிர்...

ஒவ்வொரு கயிரும் நான் பேசி முடிக்காது
விட்ட வார்த்தைகள்..
எத்தனை தாபம்
எத்தனை ஏக்கம்
எத்தனை தீர்க்கம்
எத்தனை எதிர்ப்பார்ப்பு
பதில் இல்லா காலங்கள் வலிக்கிறது

என்ன தான் பதில் இதற்கு கேட்கிறான்
புரியாது நிற்கிறது என் ஊஞ்சல்
கேள்வி தெரிந்தால் தானே பதில்...
கேள்வியே தெரியாத காட்டில்
எந்த வேரில் இருந்து பதில் தேடி எடுக்க...
ஒவ்வொரு வேரிலும் மண்டி கிடக்கும் பதில்களை
வெறுமே பார்க்கிறேன்...

நான் கேட்டேன்
உன் ஜன்னல் சுகமா
உன் வானம் எப்படி என்று...
என் வானம் இருண்டு யானை நிறமாய்
நீலம் தொலைத்து தேடுகிறதை கூற...
சொல்வான்
அவனுடைய செவ்வானத்தை எனக்கு சிறிய
பொட்டலமாக்கி என் வழி வரும் மேகத்திடம் தருவதாய்!

தொலைக்குமோ மேகம் உன் வானத்தை.. கேட்கிறேன்.
உன் முகம் தந்து அனுப்புகிறேன் தொலைக்காது...
ஜன்னலின் பக்கமாய் காத்துக்கொண்டே இரு..
மறக்காது உன் வானத்தில் பூசிக்கொள் என்றான்..
நீயும் நானும் அருகில் இருந்தால் என்ன சொல்வோம்?
நீ கேட்க..
வார்த்தைகள் நட்டு மௌனம் முளைத்த வெளிகளில்
அமைதியோடு இருப்போம் என்கிறேன்...

நான் ரசிக்கும் அத்தனையும் நீ ரசிப்பாயோ...
கேள்வி எழந்து நம்மை பார்க்க
சுழலும் நம் பூமிகள் எதிர்பதங்கள் தான்...
என் வானம் உன் நிலம்!
உன் இருட்டு என் பகல்!
என் காற்று உன் தண்ணீர்!
உன் சிரிப்பு என் அழுகை!
இப்படி அத்தனையும் மாறி மாறி நிற்க
இத்தனையின் ஊடேவும் தொடுகிறோம்...
வானம் ஏறி நான் வர
பூமி நோக்கி நீ வர...
நம் ஊஞ்சல் பாதைகள் உறைந்து போய்..