Saturday, August 25, 2007

எனக்கு பிடித்த 50!!!

1. இரவு முழுவதும் வராமல் முரண்டு பிடித்து, விடியும் போது வந்து திட்டு வாங்கி வைக்கும் தூக்கம்
2. மார்கழி பனியில் நான் போட்ட கோலம்

3. விடிந்தும் விடியாத வானில் வரும் ரத்த சிவப்பு

4. புதிதாய் நான் போட்ட தாவணி

5. அடை மழையில் என்னோடு நனையும் என் செல்ல மொட்டை மாடி

6. திட்டி கொஞ்சி அதட்டி சோறு ஊட்டும் தாய்

7. ஜுரத்தொடு உடம்பு முறுக்கி வரும் வலி

8. என்னை உயிர் என்று சொல்லி இப்படி என் உயிரை பிரித்து சென்ற என் தந்தை
9. பஞ்சு பொதியை போல் நீல வானின் நடுவில் மிதக்கும் வெண் மேகங்கள்

10. தினமும் நான் இடிப்பட்ட என் பஸ்
11. கண நேரம் ஆனாலும் கண்ணோடு கண் நோக்கி மறு நிமிடம் மறையும் திடீர் ஈர்ப்பு

12. வியர்வை மழையில் வெம்பி நனையும் சமயம் உள்ளே நுழைந்ததும் முகம் தாக்கும் சில்லென்ற
குளிர் அறை
13. பௌர்ணமி இருட்டில் நிலவொளியில் தங்கமாய் மாறி காலை தழுவும் கடற்கரை அலை

14. இலையில் முகம் மறைத்து எங்கோ குரலால் அடையாளம் காட்டும் அந்த கருப்பு குயில்

15. கண்ணாடியாய் நீர் கூழாங்கற்கள் பளபளக்க ஓடும் மெல்லிய நீரோடை

16. முன் பின் தெரியாமல் போயினும் சக உயிருக்காக சட்டென்று கண் நனைக்கும் மனிதம்

17. எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் ஜன கண மன
18. முகத்தில் மழை சாரல் அடிக்க ஜன்னலில் சாய்ந்து சுட சுட குடிக்கும் தேநீர்

19. நிமிட நேர பிரயாணத்தில், ஒரு முறை பல முறை முகம் பார்க்க கண்கள் இருந்தால், நான் அழகு தான் என்று உள்ளே பீறிடும் திமிர்

20. மதியம் உண்டதும் உடல் முழுவதும் பரவும் மெல்லிய மயக்கம்

21. ஆணா பெண்ணா என்ற ஆதார குழப்பம் இருப்பினும், பிறந்து உழன்று இறப்போர் நடுவே தலை நிமிர்ந்து நடக்கும் திரு நங்கைகள்

22. கட்டில் மேடையில் கட்டி புரந்து சண்டையிட்டு வியர்வை முத்துக்கள் கோர்த்து இருவரும் தோல்வி தழுவ, காதோரத்தில் கேட்கும் கூசும் சூடான மூச்சு

23. பசியோடு வரும் சமயம் கமகம நெய்வாசம்

24. தூக்கம் தழுவும் நேரம் மெலிதாக நெஞ்சை நனைக்கும் இசை

25. சீரான சாலையில் பாடல் காதில் ஒலிக்க காற்று தலை கலைக்க காதலை கட்டி செல்லும் நீண்ட தூர பயணம்

26. தள்ளாத முதுமையிலும் கையோடு கை கோர்த்து ஒன்றாக வாழ்ந்து வயதான தாம்பாத்தியம்

27. நரை ஓடியும் நாடி தளர்ந்து போனாலும் முதுகு மேல் கோணி கொண்டு இன்னும் வேலை தேடும் முதுமை

28. குளிர் உறைந்து நடுங்க செய்யினும் உள்ளுக்குள் சூடு காக்கும் என் கம்பளி

29. தூங்கி எழுந்த பின்னும் படுக்கை விட்டு நகராமல் உருள வைக்கும் பாம்பு சோம்பல்

30. பிடிக்குமோ பிடிக்கவில்லையோ எந்நேரமும் நான் முணுமுணுக்கும் ராகங்கள்

31. எப்போதாவது தோன்றி அதிலும் எப்போதாவ
து ருசியாய் வரும் என் சமையல்
32. காலப்போக்கில் தேய்ந்து போனாலும் நினைத்து போதும் இனிக்கும் என் பள்ளி பருவ நினைவுகள்
33. எழுந்தே ஆகவேண்டும் என்று தெரிந்தும் எனக்கு நானே கொடுத்த கொள்ளும் கடைசி 2 நிமிட தூக்கம்

34. எங்கே கேட்டாலும் நாமும் சேர்ந்து கொள்ள தூண்டும் சிரிப்பு

35. எழுத முடியவில்லை எனினும் கவிஞர் போல் கவித்துவமை எழுத ஆவல்

36. விழுந்து புரண்டு தூங்க ஏக இடம் இருந்தும் முதுகு ஒட்டி என் வாசம் பிடித்து தூங்கும் என் செல்ல மகன்

37. என் ஜன்னலின் வழியே பார்த்தால் நான் பார்த்த சந்தோஷத்தில் சலசலக்கும் மரங்கள்

38. என்ன மொழியோ, நிறமோ, ஊரோ, பெண்ணின் குமரி பருவமோ, தாய்மையோ, முதுமையோ பார்த்ததும் மனம் கவ்வும் பாந்தமான அழகு

39. விண்ணை முட்டும் கட்டடங்கள் இருந்தும் அதன் மத்தியில் இன்னும் முற்றம் தாங்கி நிற்கும் வயதான பழுப்பெறிய வீடுகள்

40. நான் இருக்கிறேன் என்று எப்போதும் ஞாபகம் செய்யும் தோழமை

41. கலாசாரம் பண்பாடு எல்லாம் நடைமுறையில் முரண்பட்டு கிடந்தும், பார்த்ததும் ஒரு வினாடி நெஞ்சை கிள்ளி விடும் அந்த மஞ்சள் வாசத்துடன் அந்த புது தாலி கயிறு

42. காலும் மனதும் நனைக்க நின்றதும், அதை தனக்குள் இழுத்து தன்னையே பார்க்க சொல்லும் அலையும் மணலும்

43. குளித்து முடித்து கிளம்பியே ஆகவேண்டும் ஆயினும் ஒரு வினாடி திருடி, மறுபடி கண்ணாடி பார்க்கும் சந்தோஷம்

44. கடகட ரயிலில் நிமிடம் ஒரு படம் மாறும் ஜன்னல்

45. வளர்ந்து கொண்டே இருப்பினும் இன்னும் என் மகன் மேல் வீசும் பால்வாசம்

46. விடியல் சூரியன் உள்ளே வர அதில் மிதக்கும் தங்க துகளாய் தூசிகள்

47. கருத்த மேக கன்னத்தை கோபத்தில் கிழிக்கும் மின்னல் கீற்றுகள்

48. எத்தனையோ குளிர் பாணங்களும் ஐஸ்க்ரீம் இருப்பினும் கை கட்டை விரலால் இன்னும் தின்ன சுவை காட்டும் நுங்கு

49. வரிசை வரிசையாய் வீட்டு சுவற்றில் கார்த்திகை தீபம்

50. எந்த ஆட்டம் போட்டாலும், எத்தனை பெயர் பெற்றாலும், எத்தனை கோடி கொண்டாலும் கடைசியில் அடையப்போவது இதை தானே என்ற தத்துவம் உணர்ந்து அமைதியை வேடிக்கை பார்க்கும் அந்த சுடுகாடு