Sunday, February 21, 2010

உடலும் உடல் சார்ந்த என் பாலையும்...



வேட்கை தகிக்க நடக்கிறேன்...பாலை..
நடக்கும் உடல் முழுக்க முட்கள்...
வழியும் என் நீச்ச ரத்தத்தின் வாடை காற்றில் மேய
எஞ்சி நிற்கும் சருமத்தில் ஒழுகிய எச்சிலின் மிச்சங்கள்
கால் படறும் என் தரை முழுக்க ரத்தம் தோய்ந்த உதடுகள்!

உதடுகளின் சூடு பழுக்க வைக்கிறது
காலின் உட்சருமத்தை...
சூட்டுக்காக ஒதுங்க இடம் தேட
வழிமுழுக்க அலையும் கைகள் கொண்டு
நெடுநெடுத்து வளர்ந்து நிற்கும் மரதேகங்கள்...

நிழலுக்காய் ஒதுங்கி நின்றால் மரகைகளுக்குள் இருந்து
வளரும் நகங்கள் போடும் மார்பில் கீற்றுக்கோலம்!
எஞ்சிய சருமம் காக்க விலகி சென்றால்
மரகால்களாய் நின்ற வேர் தடுக்கி விடும் என் நடையை!
ரௌத்ர நிழல்களுக்கு பயந்து ஒதுங்குகிறேன் என் வெயிலில்..

கவ்வி சுவைக்கும் உதடுகளுக்கும்
எட்டி பிறாண்டும் கைகளுக்கும்
மத்தியில் நானும் என் பசியும்...
திக்கு தெரியாது தடாகங்களை தேடி போகிறோம்..
தடாகங்கள் குளிரும் யாரோ சொன்னார்கள்!

தண்ணீரில் உடல்கசடு கழுவலாம்!
தண்ணீரில் தாகம் தணிக்கலாம்!
தண்ணீரில் பிம்பம் பிரதிபலிக்கலாம்!
தண்ணீரில் மிதக்கலாம்!
தண்ணீரில் கரைந்து போகலாம் என்றும் சொல்லியிருந்தனர்!

தடாகம் இருக்கும் இடங்களில்
சக உயிர்களும் காண இயலும் என்றும் சொன்னார்கள்!
அவை மனிதமோ மிருகமோ தெரியாது இப்போது!
சலசலப்புகள் மட்டுமே கேட்கும் காதுகளுக்கு
துடிக்கும் இதயங்களின் சப்தம் கேட்கக்கூடும் முதன்முறை...

மென்மைகள் தேடும் கால்கள் சுமந்து
வழிமுழுக்க தகிக்கும் நாக்குகளுக்கு ரத்தம் சொட்டவிட்டு
தட்டுத்தடுமாறும் நடைகளோடு செல்கிறேன்...
வெடித்த கட்டாந்தரைகள் வழிகூற மறுக்கும்!
ஆர்ப்பரிக்கும் மௌனங்களும் கணக்கெடா தூரங்களும் கண்சிமிட்டும்...

முதுகில் அமர்ந்திருக்கும் கனவு மூட்டை
ஒவ்வொரு நொடியும் பிரசவிக்கும் கனவு மகவுகளை...
சிதறியோடும் ஒவ்வொன்றையும் எடுத்து
திணிக்கிறேன் மூட்டையின் உள்ளே...
நீர்தேக்கம் வரை துணை வர சொல்லி!

அடைந்தேன் குற்றுயிராய் என் இலக்கை!
கனவுகளோடு பொதிந்தேன் சில்லென...
கண்முன் எல்லாம் என்னுள்ளாக மாறுகிறேன் விதையாய்...
வளர்கிறேன் விருட்சமாய், என் கைகள் வான் நோக்கி..
நான் கடந்த மரங்களை விட மிக பிரம்மாண்டமாய்!

என் நிழல் உங்களுக்கு இதம் தரும்...
என் காற்று வறண்ட உங்களுக்கு உணர்ச்சி தரும்..
புதிய தாய்மரமாய் ஆன என்னிடம்
நீங்கள் இளைப்பாறலாம் உங்கள் பயங்கள் விடுத்து...
இன்றும் இனி எப்போதாவது இவ்வழி செல்ல நேரினும்!