Saturday, December 5, 2009

என் இரவுகளில் !

தகிக்கும் தொடல்களின்
வெப்பத்தில் மெல்ல மெல்ல உருகும் நேரம்!
நொடிகள் தீய்ந்து நிமிடங்களாய்...
நிமிடங்கள் கருகி மணி கூறுகளாய் ...
மணிகளும் பொசுங்கி நாட்களாய்...
காணாமல் மெதுவாய் போய்கொண்டே இருக்க!
படுக்கையில் பரந்து நான் கிடப்பேன்
என் மேல் பட்டாம்பூச்சியின் சிறகாய் மாறி நீ...

கொல்வாயோ? கொடுப்பாயோ?
இருப்பாயோ? பறப்பாயோ?
பனிக்கட்டியின் வெப்பத்தில்
புகையாய் உருகும் நீர்த்துளியாய்
நீயும் நானும்!
இங்கு கலந்து எங்கும் படர்ந்து
கரைவோம் சட்டென....

ஓடியும் நேரக்கிளைகளில்
காயத்துடிக்கும் மலராய் நாம்...
நடுநிசி பொழுதுகள்
ஒரு வலியில் தொடங்கி
ஒரு வலியில் முடியும்...
இன்றையும் நாளையும் தாண்டி
நம் எல்லாமே மாயம் ஆக!
என் நெஞ்சுக்கூட்டில் ஒளித்து
வைத்திருக்கும் மயிலிறகாய்
இக்கணங்கள்...
கண்ணின் பின்திரையில்
நீ உறங்கும் இந்நொடி
அழியா படமாய்...

கடைசியில் எஞ்சி கையில்
உறுத்தும் சில மிச்சங்கள்
உன் முத்தத்தின் காய்ந்த ஈரமும்!
என் கண்களின் சிவப்பும்!
கரைந்து போன கண்ணீரின் கரிப்பும்!
காயமாய் நீ விட்டு போன தடங்களும்...

தேடி தேடி சேர்த்து வைக்கும் என் மனது
நீ சென்ற சுவட்டை!
ஆனால் மறந்தே போகும் நீ போன வழி...
இந்த நினைவு மூட்டைகள் மட்டும்
என்னோடு சுகமான முடிச்சாய்...
தொக்கி கொண்டு வரும்
என் இறுதி வரை....

சிறு கூட்டு புழுவாய் இருந்த போது
நம் நெருக்கம்...
அதை நீ பறந்தும் மறந்தும்
போக நேரும், என் கண்ணே!
நீ வண்ணகரைசலில் மூழ்கி
காற்று கயிர் ஏறி பறக்கும் உயிராய்...
என் கைகளை விட்டு வெகு தூரம் கொண்டு செல்லும்
உன் சிறகுகள் கண்டு எனக்கு ஆனந்தம் தான்....
ஆயினும்
கையோடு என்றும் இருக்கும் நீ இருந்த கூடு
நடந்தது நிஜம் தானென்று உறுத்திய படி....