Tuesday, April 9, 2013

வார்த்தை கூடுகள்!!!


அழகான மெல்லிய கூடுகளால்
சுமந்தபடியே திரியும் மனிதர்கள்!
சில கூட்டுக்குள் பழுத்திருக்கும் பழமும்
சிலவற்றுக்குள் பூரானும் ஒளிந்திருக்கிறது!

உருட்டிவிட்டால் விழும் தாயம் மட்டுமே
நிர்ணயிக்கிறது வரப்போவது
பழமா பூரானா என்று!
எத்தனை உருட்டினும் பழம் கிடைப்பதே இல்லை!

அசைந்து வளரும் அவைகளை
உற்று நோக்கினால் கூடுகளை இழைத்து
கொண்டிருக்கிறது வார்த்தைகளும்
வார்த்தை சார்ந்த நினைவுகளும்!

ஆட்களுக்கு ஏற்றார் போல நிறம் மாறும் கூடுகள்
நேரத்திற்கு தகுந்தாற் போல் உருவம் மாறும் கூடுகள்
சிறிதாகி பெரிதாகி இருந்தும் மறைந்தும் ஆடும்
இவற்றின் நடுவே நானும்!

உன்னுடைய வார்த்தைகளை கொண்டு என்
கூட்டிற்கு வர்ணம் தீட்டினாய்!
அங்கங்கே எப்போதும் உன்னோடு! நீ மட்டுமே வேண்டும்
என்ற வாக்குதத்தங்களையும் என் கூட்டிற்குள்
கூசாமல் மாட்டி சென்றாய்!

உன் வார்த்தைகளால் இழைத்த பகுதி
அழுகி நாறும்!
உன் வார்த்தைகளை ஏற்றதால் என் கூடும்
கருகி சாகும்!

பேராசையின் வார்த்தைகளுக்கும்
விஷம் தோய்ந்திருக்கக் கூடும்!
ஒவ்வொரு முறை வார்த்தைகள் கருகும் போது
புதிய வீரியத்தோடு வார்த்தைகளை இழைக்கிறாய்!

இடிந்து மடிந்து விழும் உன் வார்த்தை கூட்டோடு
என்னுடைய சிறகும் மங்கி போகிறது!
இறந்து இறந்து பிறக்க உனக்கான வார்த்தைகள்
உன்முன் மண்டியிட்டே காத்து கிடக்கிறது!

உன்னோடு குழைந்து வளைய இனி என் கூட்டிற்கும்
என் சிறகிற்கும் தெம்பு இல்லை!
கூடுகளில் ஒளிந்திருந்து வாழ்வதை
மட்டுமே பழகிய எனக்கு
இனி மழைநீர் துளிகள் இடம் தரும்!