Monday, January 14, 2008

நீ!!!

என்னுள் நீ வந்த பின்...
ஏனோ மனமும், மொழியும் பிழன்று நான்...
கேள்வி குறிகள் என் பசியாற்ற
உதட்டோர சிரிப்பு ஜீவன் குளிப்பாட்ட
கண் திருடும் கணங்கள் நம் உயிர் காக்க...
கனவு திரளில் உன் முகம், என் உறக்கம் விழுங்கி...

என்னுள் புகுந்து, என்னை பெயர்ந்து
இதோ பறக்கிறேன், மிதக்கிறேன், சிலிர்க்கிறேன்
அழுகிறேன், சிரிக்கிறேன்
ஏனோ சிரிக்கும் போதும் கண்ணில் நீர்...
எப்போதும் நீ இருப்போயோ என் அருகில்?
கஷ்டம் தான்...

இலக்குகள் தேடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கட்டாயம் பிரிவோம் நாளை...
அது உண்மை தான்...
ஆனால் வாழ்வில் ஒரு முறை
நான் உயிர் வாழ்ந்த புண்ணியம் உனக்கு தான்...
நாளைய நாட்கள் இறந்தாலும்
இந்த வினாடியின் உயிர் துடிப்பு
என்னுள் நீயாக...
என்றென்றும்!!!

வாசம்

எப்போதோ கண்டு எனக்கு
பிடித்து தான் இருந்தது ரொம்பவே!
உன் வாசம்...
கோவில் திருநீறும், ஈர மண்ணின் வாசமும் கலந்தது போல!!!
பக்கம் நீ செல்லும் போது சுவாசம் முழுக்க இழுத்து...
மெதுவாய் பின்னே அசைபோடும் நினைவுகள்!!!

இரவில் படுத்து,
இருட்டில் உன் வாசம் நினைக்க
கண் முன் வரும் உன் கண்கள்...
நாட்கள் தேய தேய...
அருகில் இருந்தும் வெகு தொலைவில் நீயும் நானும்...

தேயும் இந்த கணமும்
எதிர்பார்த்து காத்து கொண்டே இருக்கிறேன்!
தொலைந்த எனக்கு பிடித்த
உன் முகமும் வாசமும் உணர...

கண் எதிரே தான் நீ!!!
என்னால் தான் காண முடியவில்லை
உன் முகத்தையும், வாசத்தையும்
ஏனோ?

பிழைகள்!!!


என் கடந்த கால சுவட்டில்
திருப்பிய பக்கம் எல்லாம் எழுத்து பிழைகள்!
பிழைகளை இப்போது காணும் நேரம்
நானா செய்தேன் என்று தோணும்...
ஆனால் மறந்தே போயிற்று
பிழைகளின் மூலம் மனம் நிஜம் காணும் நிதர்சனம்!!!
தீ சுடும் என்று படித்தேன்; சொன்னார்கள்;
ஆனால் கையை சுட்டு புண்ணாக்கிய இந்த நொடி
ஏனோ அந்த பாரதியின் நினைவு!
தீக்குள் விரல் வைத்து தீண்டிய
சுகம் உணர்ந்தவன் அன்றோ அவன்!
எனக்குள் மட்டும் ஏனோ வலி...
பரவாயில்லை!
பரிணாம வளர்ச்சியில் இன்னும் நான்...
சீக்கிரம் எனக்கும் கிடைக்கும்
என் சிறகுகளும் ஒரு கூடும்!
அது வரை மனது எண்ணி கொண்டே தான் இருக்கிறது
இன்னும் எத்தனை பிழைகள் என்று!!!