சிறு வார்த்தையின்
பிரம்மாண்டமான
வெற்றிடம்...
மன்னிப்பு...
ஏதும் வாழ இயலாத உயிரற்றபூமி...
சரியான அளவுகோல் இல்லை...
கையில் எடுப்போரின் தராசாய்...
பண்டோராவின் பெட்டியாய்...
கோபம், வெறுப்பு,
திமிர், பொறாமை,
பாசாங்கு, காழ்ப்பு,
கொடுஞ்சிறகுகள் ஏற்றி
சிரிக்கும் குழந்தைகளை
கொட்டிவிட்டு
மரணத்தை ருதுபடுத்தும்...
அன்பை இழந்ததும்
நிழல் தொலைக்கும் உயிர் நாம்...
காலக்கூடுகளின்
கைதிகளாய்...
வெட்டி எடுக்க முடியாத
உறைந்த பனி...
கண்களுக்கு பதில்
கண்ணாடிகள்
கூண்டாய் மாற
முகம் பார்ப்போம்
எதிர் எதிர்...
சுவாசிக்க என் காற்று மட்டுமே எனக்கு....
உன் கூண்டு உனக்காய்...
கூண்டுகள் குழையும்
கூண்டுகள் நெளியும்
கூண்டுகள் உடையாது..
உயிர் நெருக்கும் மௌனம்
தள்ளிவிடும் தூரத்தில்...
நம் கூண்டுகளை...
எதிரேயே இருந்தும்
சிறு நீரோடை ஆகும்
செங்குத்து பள்ளதாக்குகளாய்...
இப்போதெல்லாம்
கண்ணாடியில் உன்முகம்
பல நிறங்களுடன்...
பயம் தான்..
என் கூண்டின் சூரியனாய்...
முகத்தின் மேல்
எண்ணிறைந்த நிலை...
நிமிடம் முகமூடி மாறிவிடும்
முதுகெலும்பின் ஒவ்வொரு
படியாய் என்
தனிமை பயம்பற்றி...
ஓடிவர எண்ணிய கூண்டு
இப்போது பின்னோக்கி....
கரைந்து....
திரும்ப மறுக்கும் அன்பானால்
சிதைந்துவிடும்
என் அழகு சிறை...
கருணை கம்பிகள் இல்லை அதில்...
சொல்லியே ஆகவேண்டும்...
இதை மட்டும்!
அன்பை மட்டுமே கொடுத்த
அழகு இதயங்களில்
காயங்கள் ஏற்றிய
என் துரோக முத்தங்கள்
என்னையும்
மாற்றித்தான் விட்டது
அருவெறுப்பான
அழுகும்
வெறும் ஒரு
தழும்பாய்...
Thursday, November 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment