Friday, July 8, 2011

இன்னும் காணாத கனவுகளை தேடி!!!

வந்து வந்து வெறுமையாய் திரும்பி செல்லும் கடலலை!
ஆளின்றி காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சல்!
ஏதோ சூட்சமத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கடிகார பெண்டுலம்!
காய்ந்து உதிர்ந்து கருகும் வரை எங்கெங்கோ அலையும் இலை!
இது போன்ற ஏதோ விசையாக சுழல்கிறாய் என்னுள்...

என் மனதின் கைப்பிடி என் கைக்குள் சிக்கி தடுமாறும்!
ஒருகணம் உன்னை கைதியாக்கி நானே எனக்குள் இடுகிறேன்..
மறுகணம் நானே உன் நினைவுகளை பெறுக்கி வெளியே எறிகிறேன்..
உள்ளிருக்கிறாயா? வெளியேறிவிட்டாயா?
உனக்குள்ள குழப்பம் தான் எனக்கும்!

உன் நினைவுகள் மட்டுமே எனக்கான நங்கூரம்!
இன்றைய ஓட்டங்கள் முடிந்து நான் சுருண்டு உறங்குவதும்
உன் சிரிப்புக்குள் மட்டும் தான்!
எனக்கான தேவைகள் உன் தேவைகளின் கழுத்தை கவ்வி
ரத்தம் உறிந்து கொன்றுவிடும் பெருவல்லமை கொண்டவை!

கைக்குள் வைத்திருக்கிறேன் உன்னோடு கண்ட நிறங்களை..
நீ காட்டிய தெரியாத உலகங்களில் வாசத்தோடு சேர்த்து!
எனக்காக என்னோடு இருந்த உன்னை
உனக்காக வேண்டி பறக்கவிடுகிறேன்
பட்டமாக அல்ல பருந்தாக!

என்னுடைய கனவுகள் முழுக்க உதிர்ந்துவிட்டதால்..
உனக்கான கனவுகளை தேடிக்கொள்வாய் என்ற
வேண்டுதலோடு....

4 comments:

சத்ரியன் said...

எல்லாம் நிறைந்திருக்கும் உலகில், எதுவுமே புலப்படாத வெறுமையின் மைதானத்திற்கு அழைத்துக் செல்லும் வரிகள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>உள்ளிருக்கிறாயா? வெளியேறிவிட்டாயா?
உனக்குள்ள குழப்பம் தான் எனக்கும்!

உன் நினைவுகள் மட்டுமே எனக்கான நங்கூரம்!

மனம் தொட்ட வரிகள்

சு. திருநாவுக்கரசு said...

"கைக்குள் வைத்திருக்கிறேன் உன்னோடு கண்ட நிறங்களை..
உனக்காக வேண்டி பறக்கவிடுகிறேன்
பட்டமாக அல்ல பருந்தாக! "

-வீரியமிக்க வரிகள்!
கொஞ்சம் நேரம் மனது
வலித்தது படித்த பின்னர்...

SURYAJEEVA said...

கானல் நீர் தான் கனவுகள்,
பிம்பம் அது,
இல்லாத பொருளுடையது அல்ல...
எங்கோ இருக்கும் ஏதோ ஒன்றுடயது...
அருகில் சென்ற உடன்
மறைந்து விட்டால்
மனம் தளராதே
அது எங்கிருக்கிறது என்று தேடு
அங்கிருக்கும் உனக்கான வாழ்க்கை..