Thursday, March 24, 2011

மெர்க்குரியானவன்!


சில வேலைகளில் ஸ்தம்பிக்கிறேன்...
நொடிக்கு நொடி இறந்து பிறக்கும் உலகை பார்த்து..
நான் என்ற நான் மட்டும் சப்தமின்றி இயங்கி வந்தேன்!
என் உலகம் சிரிப்புகளும் அழுகைகளும் தாண்டிய உலகம்...
வெற்றிடத்தில் மிதப்பதை ரசித்திருக்கிறேன்!
எதுவும் தொடா இடத்தில் நான் சஞ்சலங்களை
தாண்டியபடி மிதக்கையில், அது!

கருப்பு பட்டாம்பூச்சி சிகப்பு கண்களோடு
என்னையே சுற்றி சுற்றி...
பட்டாம்பூச்சியின் கருப்புதிர்ந்து விழ
காதலனாகி எழுகிறது அது!
தொட்டால் உள்ளிழுக்கிறான்!
என் மேல் விழுந்து நானாகிறான்!
விலக்கி விடுகையில் பல்லாயிரம் அவனாக சிதறி
என் கண்முன்னே ஒரு அவனாகிறான்...

நான் தொடும் பொருளாய் மாறுகிறான்!
நடக்கும் பாதையாய் மாறுகிறான்!
வளைந்து குழைந்து வானின் வண்ணம் ஆகிறான்!
மேலே விழுந்து உடல் தொட்டு செல்லும் மழை ஆகிறான்!
வெற்றிடம் தகதகக்க
என் உலகங்கள் ஆகிறான்!

சுற்றி நிற்கும் ஐம்பெரும் பொருளாகி
என்னுள் கலந்து கரைத்து காணாமல் போனவன்
வந்த விநாடி தொடங்கி வாழ்க்கை
கருப்பு வெள்ளைகளுக்கும் வண்ணங்களுக்கும்
இடையே தெறித்து ஓடிகொண்டிருக்க
வேண்டாம் என்றவன் வேண்டி ஒட்டிகொள்ள
மொத்தமாய் வேரறுத்து
என் உலகை எடுத்து செல்லுவான் ஒரு நாள்
அன்று நிற்பேன் நானும் பாதரசமாய்!

Friday, February 25, 2011

வெற்றிடம் தேடி!!!



தேடியபடியே கழியுமோ என் பொழுதுகள்...
புதிதாய் முளைத்திருக்கும் பதியங்களையும்
இறந்து அழுகும் சிலவற்றையும் புதைக்க இடம் தேடியபடி!
பார்க்கும் என் வெளி முழுக்க கல்லறை தோட்டம்...
மனதுள் வெற்றிடம் அற்று போய்விட்டது ஏனோ?

கண்கள் பார்த்ததில் விதை விழுந்து,
மெல்ல சிரிக்கையில் துளிர்விட்டு,
பேசி புரிததில் தளிர்த்து,
ரசித்து ருசித்ததில் இளவண்ணங்கள் தாங்கி,
அழகாய் வளர்ந்து நிற்கிறது
ஒருபுறம்
என் காதல்கள்!

பிடித்ததன் காரணங்கள் மறந்து
பேசுவது குறைமட்டும் கூற என்று ஆகிப்போய்
கேள்வி இல்லா கோபங்கள் தாங்கி
அன்பும் அமைதியும் குப்பையில் போட்டு
ஆசையையும் கொன்றதில்
இறந்து அழுகி போகிறது
ஒருபுறம்
என் காதல்கள்!

இறப்பும் பிறப்பும் காலசுழற்சி
என்பது புரிந்துவிடுகிறது!
காதல்களுக்கும் அவை உண்டென்பதை
மெதுவாக உணர்கிறேன்...
வெற்றிடம் தேவை!
இறந்த வயதான காதல்களையும்
இதோ கண்முன் பிறக்கின்ற காதல்களையும்
சுமந்து நிற்கிறேன்
புதைக்க இடம் தேடியபடி!

Wednesday, January 5, 2011

இதன் பெயர் பெண்ணியமா ?



சமீபத்தில் கேட்ட dialogue: அவன் குடிக்காரனா இருந்தா, அதுக்காக அவ கண்டவன் கூட போகணுமா ? (censored version)

கதையின் பின்புலம் : நன்கு படித்த வேலையில் உள்ள இளைஞன், நன்கு படித்து வேலையில் இருந்த பெண்ணை திருமணம் செய்து அழகான பிள்ளையும் பெற்று, வாழ்க்கை அழகாக போய் கொண்டிருக்கும் சமயம், நான்கைந்து வருடமாக கடும் குடிப்பழக்கத்திற்கு கணவன் ஆளாக, பெண்ணிற்கு இன்னொரு ஆணோடு தொடர்பு ஏற்பட்டதோ அல்லது ஏற்பட்டதாக எண்ணம் வந்ததோ, 5 வயது குழந்தையை பற்றி கருதாது, ஆண் தற்கொலை செய்து கொண்டான்.

ஆண் பக்க நியதி:
1. ஊரில் குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் வெகு குறைவு, அதற்காக பெண் தன் எல்லையை தாண்ட வேண்டுமா?
2. திருமணம் என்ற பந்தத்தில் உடன்பட்ட பெண்ணிற்கு எப்படி கணவன் அல்லாதவனை பற்றி எண்ணத்தோன்றும். அப்படி தோன்றினால், அவள் பரத்தையை போன்ற சிந்தை உள்ளவள் தானே?
3. அந்த காலத்தில் எல்லாம் அடித்தாலும், உதைத்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று அல்லவா இருந்தார்கள். ஏன் இப்போது இந்த மாற்றம்?
4. குடும்ப நலத்திலும், குடும்பத்தின் பெயரை காக்கும் பெரும் பொறுப்பில் இருக்கும் பெண் கணவன் குடித்தாலும், அடித்தாலும், ஊதாரியாக இருந்தாலும் எப்படி அவனை விட்டு பிரியலாம்?

பெண் பக்க நியதியை எந்த இடத்தில் நின்று பேசுவது என்று புரியாது நிற்கிறேன். ஏனென்றால் வாழ்க்கை கருப்பு வெள்ளை அல்லவே. இடையே உள்ள grey shades தானே எல்லா இடங்களிலும் விரவி உள்ளது. இதில் எந்த இடத்தில் நின்றாலும் அந்த இடத்திற்கு ஒரு விளக்கம் இருக்கிறது. வாழ்க்கையில் சரி தவறு என்று இல்லை. என் பார்வையில் சரி என்பது மற்றொருவர் பார்வையில் தவறாக தெரியலாம்.

அந்த பெண்ணிற்காக வாதாடவில்லை என்றாலும் மருத்துவராக என் பார்வை:

எந்த ஒரு relationship தங்கு தடையின்றி செல்ல நல்ல கருத்து, பேச்சு பரிமாற்றம் தேவை என்று சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்னும் பின்னும் கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை வரலாம். ஆனால் கட்டாயம் வரும் என்பதற்கு இல்லை. அப்படி ஒரு வேலை கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாலும், அல்லது திருமணம் செய்த பின் இருவரின் ரசிப்பு தன்மை குறைந்து போனாலும், அதற்கு யாரை குறை சொல்லமுடியும்.

திருமணம் செய்து கொண்டதால் மட்டும், இருவருக்கும் கட்டாயம் ஒருவரை ஒருவர் பிடித்து தான் ஆக வேண்டுமா? பிடிக்காது போனாலும் வேறு வழியில்லாது, வாழ்ந்து வந்த நிலை மாறி, பெண்கள் படிப்பாலும் வேலையாலும் தனித்து நிற்கவும், பல்வேறு தரப்பட்டவர்களை சந்திக்கும்படி நேரும்போது, மனநிலை மாறி போக நிறைய platform உண்டாகிறது நிஜம் தான். Change is the only constant thing அப்படின்னு Heraclitus 535B.C - 475B.Cலயே சொல்லிட்டு போயிட்டார்.

குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் உடலை மட்டும் அன்றி மனத்தையும் சோர்வடைய செய்யும். தேவையில்லாத கோபம், guilty conscience, அர்த்தமற்ற சந்தேகங்கள், பிசாத்து பெறாத விஷயங்களுக்கு சண்டை, தன் நிலையை நியாயப்படுத்த மற்றவர்கள் மீது குறை கூறுவது, உடலாலோ மனதாலோ தாம்பத்தித்தில் ஈடுப்பட முடியாது போவது, குடும்பத்தை நடத்த போதிய பணம் தராது போவது, சமூகத்திலும் குடும்பவட்டத்திலும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது இப்படி அடுக்கிக்கொண்டே போகும் போது பெண்ணின் மனதில் கணவன் என்ற பந்தத்தின் மீது லேசான விரிசல் ஏற்படலாம். இந்த விரிசல் நாளடைவில் பெரிதாகலாம். ஏதோ ஒரு விதத்தில் தான் ஏமாற்றப்படுவது போல தோன்றும் சமயம், தன்னை சந்தோஷப்படும் நட்பு கிடைக்க நேர்ந்தால், அந்த சந்தோஷத்தை தக்கவைக்க எத்தனை தூரம் ஒரு பெண் பயணப்படுவாள் என்பது தான் grey area. அந்த சந்தோஷத்தின் அளவும் முடிவும் grey area தான்.

அடித்தாலும், மிதித்தாலும், சக மனுஷியாக மதிக்காது நடத்தினாலும் பொறுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற கட்டாய சூழல் மாறிய நிலையில், ஆண் பெண்ணை பற்றி வைத்திருக்கும் rules மாறவேண்டுமா இல்லை பெண்ணின் மனவோட்டம் தவறாக மாறிவிட்டதா?

முன்பு படிக்காது, அடுப்படி, குழந்தை, கணவன் என்ற வட்டத்தில் மட்டும் இருக்கவேண்டும் பெண்கள் என்ற நிலைப்பாடு மாறி, படித்த வேலைக்கு செல்லும் பெண் வேண்டும் என்று கேட்கும் போதே இந்த மாற்றமும் வரலாம் என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

எது சரி??? எது தவறு???

Monday, December 27, 2010

காணாமல் கரைந்தவர்களின் குளம் !


இருட்டு குளத்தில் அமர்ந்து பார்க்கையில்
வெண்மையாய் தகதகக்கும் பிம்பங்கள்
அனைத்திலும் தொலைந்த முகங்களின் திரட்டு...
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!

இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!

கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!

நேற்று பிடித்த அவன் முகம்
குளத்தில் புதைந்து நீரின் மேற்பரப்பில்
வெள்ளி கம்பியில் காற்றாடியாய் மிதக்க
அவனும் சொல்கிறான் குளத்தின் அக்கரையில்
என் முகம் மிதப்பதாக!

Wednesday, December 15, 2010

ஏக்கங்களின் கூவல்!



தேடல்கள் நைந்து, நினைவுகள் சிடுக்கு கோலம் இடும் இரவுகளில்
விளக்கங்களும் நலிந்து போக தான் செய்கிறது!
தொடக்கங்களையும் முடிவுகளையும் காணா உயிர்கள் மலிந்து
வியாக்கியானங்களின் சுய இன்பதில் தொலைந்து கொண்டிருந்தது!

சிகப்பு ஆசைகளில் தொலைந்து நிற்கும் நான்
சமதளம் இருக்கும் மேகங்களில் இறக்கை விரிக்க யத்தனிக்க
ஏனோ கலைந்து செல்லும் கனவு குதிரைகளின்
குளம்பின் புழுதியாய் மறைகிறது வாழ்வு!

வளர்ந்து சென்ற கால்தடங்களில் மிச்சமுள்ள ஈரத்தை
தேடியபடி மீண்டும் காலசுவடுகளில் தவழ,
இம்முறை தோல் தேய்ந்து சிதறும் ரத்தம்
காய்ந்த இடங்களில் கண்ணீராய் உருள்கிறது!

தோன்றலில் இருந்த புதுமை
கூடிநின்ற குடும்பதில் குழுமிய வெப்பம்
புணர்தலின் விதிமுறையில் புரிந்த காதல்
எல்லாம் கைப்பாகி உதிர்கிறது!

இறத்தலும் மீண்டும் உயிர்த்தலின் ஆதாரம்
என்பதால் மறைவதிலும் பின் எழுவதிலும்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
ஏக்கங்கள்!

Tuesday, November 9, 2010

பூனையாகிறேன்!


என் வீட்டு அடுக்களையில்
தினம்தோறும் பூத்து நிற்கிறது
சிகப்பும் நீலமும் சுமக்கும் பூக்கள்!
நெருப்புக்கும் பூக்களும் நல்ல பழக்கம்...
பூத்து நிற்கும் அவைகளை ஒதுக்கியபடி
சமைப்பதே வழக்கமாகி விட்டது எனக்கு!

ஜன்னலின் வெளியே ஓங்கி வளர்ந்த மரங்கள்...
பச்சையில் தொடங்கி அடர் மஞ்சளில்
குளித்து அசையும் இலைகள்!
விடியலில் சத்தம் எழுப்பி தூக்கத்தை கலைக்கும்
மரக்கிளைகளில் குடியிருக்கும்
கருப்பில் தங்கம் தோய்த்த சிறகுகள் கொண்ட சிரிப்புகள்!

ஜன்னலின் வெளியே பறக்கும் சிரிப்புகளும்
ஜன்னலின் உள்ளே இருக்கும் பூக்களும் நானும்
சந்திக்க நேர்ந்ததே இல்லை,
திறக்காத ஜன்னல்களால்!
ஜன்னல்கள் இன்னமும் பூட்டித்தான் இருக்க,
சுவர்கள் கரைந்து போகிறது உன் முத்தங்கள் மோதி!

சுவரில்லா வீட்டில் முதன்முதலில் வசிக்கிறேன்,உன்னால்!
நானும் பூக்களும் சேர்ந்து சமைக்கும் அனைத்தும்
உனக்கான பண்டம்!
சமையல் முழுக்க என் வாசம்...
நெருப்பும் நானும் பூக்களும்
உன் கைத்தொட சுவையான பூனையாகிறோம்!

விரல் தீண்டலில் சிலிர்க்கும் ரோமமும்
திமிர் முறிக்கும் உடலும் கொண்டு
இப்போதெல்லாம் வெளியே பறக்கும் சிரிப்புகளை
அவ்வப்போது பிடித்து விழுங்கி விட்டு
நெருப்பின் கதகதப்பில், பூக்களில் சுருண்டு படுக்கிறேன்
உன் வாசம் முகர்ந்தப்படி!

Saturday, October 23, 2010

மஹோன்னதம்!!!



வெகு நாளாய் எழுத முற்பட்டு எழுதாது விட்டு போன
வார்த்தைகள் சலசலக்கிறது கடல் அலை போல
எழுதுக்கோலின் உள்ளிருந்து!
மறுபடி கேட்கிறேன்; யாரிடம் போய் சேர இத்தனை அவசரம் என்று?
தொலைத்தூரம் விலகி தொலைந்து போயிருந்த
ஒருவனிடம் சொல்ல விழைகிறோம் என்கிறது ஓங்காரமாய்!

``விட்டு போன அவனிடம் என்ன பிடித்தது உனக்கு?`` நான் கேட்க,
கருப்பு மை மழைதுளியாய்
என் வெள்ளை படுக்கையில் தூறி
என் அறையெங்கும் மிதக்கிறது...
கண் தழுவும் திசையெங்கும் வெகுதூரம் வரை
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதியபடி மிதக்க...
அவைகளை விலக்கியபடி நடக்கிறேன்!

கோபத்திலும் சிரிக்கும் அவன் கண்கள் பிடிக்கும் என்றவை
இருட்டில் மின்மினிப்பூச்சியாக மாறி பறந்துவிட்டது!
மீசையின் உள்ளே ஒளிந்திருக்கும் சிரிப்பு பிடித்தது என்றவை
இறக்கையில் வண்ணம் தீட்டியபடி எழுத்து கூட்டுக்குள் இருந்து
பட்டாம்பூச்சியாய் வெளிப்பட்டு அவனை தேடி புறப்பட்டது!
அவன் தீண்டல் கரடுமுரடான பட்டு போல என்றவை
அவன் வீட்டின் அருகே ரீங்காரமிட போவதாய்
சிறகு முளைத்து தாவி சென்றுவிட்டது!

அவனை ஏன் பிடித்தது என்று தெரியாத மிச்சமீதி வார்த்தைகள்
என் இரவில் விழித்துக்கொண்டும்
அவன் பகலில் தூங்கிக்கொண்டும்
என் வீட்டு விட்டத்தில் அயர்ந்து சோர்வாய் காத்திருக்கிறது!
அவனுடைய காதல் கடலாய் மாறி என் வீட்டின் கதவின்
முன்னே காத்திருப்பதாய் அவன் எழுதிய கடிதம்
என் காதல் காற்றாய் அவன் ஜன்னல் திறக்க காத்திருந்த போது
வேறு திசை அடித்துப்போவதாய் பார்த்தவர்கள் சொன்னார்கள்!

கண்ணாடி வீட்டில் இருந்து பார்க்கையில்
என் தோட்டம் முழுக்க அவனால் உருமாறிய வார்த்தைகள்
வெவ்வேறு வண்ணம் தோய்ந்து பறந்து கொண்டிருக்கிறது
வராது போன அவனை தேடி!
ஜன்னல்களில் அமர்ந்திருக்கிறோம்
நானும் சிறகு முளைக்காதவைகளும்
என்றாவது புரிப்படும் ஏன் பிடித்தது அவனை என்று!
பிடித்ததின் புரிதலில் முளைக்க இருக்கும் இறக்கைகளை
முதுகின் பின் தேடியபடி!

Monday, July 12, 2010

நான் ஆனதால்....


வலைகள் முளைத்து நகரும் தரை என் தேசம்!
சிணுங்கல் அற்ற நீர் குமிழியில் மிதக்கையில்
மெதுவாய் கேட்டது ஈரவிரலின் பிராண்டல்!
என் சுவாசம் நீரிலும்...
அதன் சுவாசம் நிலத்திலும்...
காலிடுக்குகளில் மணல் துறுவியபடி நின்றது அது.
அகல கண்விரித்து கன்னக்குழிகளில் முத்து வைத்தப்படி
சிரிக்கிறது என்னை பார்த்து.
சின்ன கை... சின்ன கால் தாங்கி!
செங்குத்து பாறைகள் கடலுக்குள் இருந்து
முளைத்தெழ, நான் அதன் மேல்!
மெல்ல அருகில் வரும் தத்தி தத்தி...
கேட்க கேள்விகள் பல அடங்கிய பெரிய கண்களோடு!
கை நீட்டி தொடுகிறேன்!
சொல்லொணா சிலிர்ப்பு உடலில் பரவ
ஆரத்தழுவுவேன்!
முத்தமிடுவேன்!
உச்சி முகர்வேன்!
முதன்முதல் இருதயம் துடிப்பதை உணர்கிறேன்!
அதுவும் சிரிக்கிறது, முத்தமிடுகிறது.
என்னோடு வா என்று நான் அழைக்க
என்னோடு வா என்று அது அழைக்க
யார் யாரோடு போவது என்று பெரும் கேள்வி!
நான் மீனானதால் தரையில் சுவாசிக்க இயலவில்லை!
என் மகவு மானுடமானதால் நீரில் வசிக்க இயலவில்லை!
கண்ணீரும் கடல் உப்பில் கரைய பிரிகிறேன்!
சல்லடை மணல் துகளும், ஈர விரலின் நுட்பமும்
மேல்வீசிய வாசமும் மட்டும் தாங்கிய
நினைவு வலைகள் மட்டும் புசிக்கும் மீனாகிறேன்!
வலைக்குள் இருந்து மீள்வேனோ மாள்வேனோ...

Monday, May 10, 2010

நானும் என் சுவர்களும்!!!



அறைக்குள் நுழைந்ததும்
என் சுவர்கள் என்னை இழுத்து அணைக்கிறது!
எப்படி போயிற்று இந்த தினம் என்று கேட்டபடி.

சிகப்பு சுவர் சொல்கிறது கருப்பு சுவரிடம்
இப்பதானே வந்தாள்...
செருப்பையாவது கழட்டவிடேன் என்று!

அழுகையோடு என் சுவர்களை பார்த்து சொன்னேன்
இன்றைய தினம் சுகமில்லை என்று!
எந்த சுவரிலும் சாயாது அறையின் மத்தியில் நின்று..

தினமும் என் பகல் முடிந்ததும் என் சுவர்கள்
துணையோடு தூங்குகிறேன்
என்னை அணைக்க போட்டிகளோடு தாலாட்டும் அவை!

காகிதத்தில் சிக்கா எழுத்துக்களால்...
காதுகளுக்கு போய் சேரா வார்த்தைகளால்...
பார்வையில் பதியா முகங்களால்...

என் இன்றைய தினமும் நிரம்பி வழியத்தான் செய்கிறது!
இன்னமும் வெற்றிகரமாய் வெறுமைகள் மட்டுமே
நிரப்புவேன் என் பேச்சில் மற்றவர்களிடம்!

என் நிர்வாணம், என் அழுகை, என் திமிர்,
என் திருட்டு, என் கோபம், என் பசி
எல்லாம் பார்த்தும் சுவர்களுக்கு என்மேல் தீராக்காதல்!

நிழல் உண்மைகள் எல்லாம் தெரிந்த சுவர்
என் பட்டாம்பூச்சியை கூட்டுப்புழுவாய் மாற்றும்!
இரவுகளில் என் அறை என்மேல் மடிகிறது...

வரண்ட செங்கலில் கூட எனக்கான காதல் மிச்சமிருக்க
என் நாட்களின் ஆசைகள் எல்லாம் வடியும் அவைகள் மேல்...
என்றும் காதலனாய் எனக்கு என் சுவர்கள் மட்டும் போதும்!

Friday, April 9, 2010

இன்பத்தில் ஓர் நாள்!



எப்போ அப்பா நான் பெருசா வளருவேன்?
பத்து வயதாய் நிரம்பி வழிந்த சிரிப்பில்
தந்தையின் கையில் படுத்து
வியர்வை வாசத்துடன் மார்பில் முகம் புதைத்து
கைவிரல் நெஞ்சின் முடி திருகியபடி..

சிரித்து பதில் சொன்னது காதில் ஒலிக்க..
தனித்து படுக்கையில் இருக்கும் இன்றைகளில்
மீண்டும் தேடுகிறேன் அதே வாசத்தை!
பார்க்கும் கைகளில் எல்லாம்
வெளுத்த வயதுகளின் வெளியில்...

சுகிக்கும் ஈர நாக்குகளும்
விரலில் சுருட்டப்படும் தோல்மடிப்புகளும்
உணராது வெறுமே வெளிவரும் முனகல்களும்
உராயும் கணங்கள் முடித்து எழுந்துபோகும் உடல்களும்
தோற்றார்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
அதே அறையில் ஒளிந்திருந்த பத்து வயது அவளை
கண்டுப்பிடிக்க இயலாது...

அழுக்கு மனிதவாடையில் மூழ்கும்
ஈர படுக்கையில் கண்களற்ற தீண்டல்களில்
தொலைந்தபடி மனக்கண்ணில் தீட்டுகிறாள்
தினம் ஒரு படத்தை...
ஒரு கணம் பனிமலையின் உச்சத்தில்
வெள்ளை சிறகு விரிக்கும் பருந்தாய்!
மறுகணம் பவள பாறையின் மத்தியில்
மிதக்கும் அழகு கடல் ஆமையாய்!

நிற்கும் சமயங்களின் நெடி தாங்காது
மூழ்கும் கனவுகளில் வந்து போகிறார்!
கைதொடா தூரத்திலேயே நின்று
முகம் பார்க்காது அவளை தாண்டி
``பாருங்க அப்பா என்னை!``என
போகும் அப்பாவின் பின்னாலே
கதறிக்கொண்டு ஓடுவதில் கழிகிறது
இவள் இரவுகள்!
எப்போ அப்பா நான் சிறுசா மாறுவேன்?