Friday, October 21, 2011

இச்சை குளம்!!!

தூக்கங்களின் துளிகள் சொட்டியபடியே இருக்கிறது!
முகங்களில் நடுவே இருந்த கண்களும் கரைந்து வழிகிறது!
குவியும் துளிகள் திரண்டு ஓடையாகி,
என்றோ எழுதிய கவிதை போன்ற ஏதோ ஒன்றின் மேடு பள்ளத்தில்
விழுந்தும் புரண்டும் சிதறி சேர்கிறது அவளுக்குள்!
குளத்தின் உள் அவள் தெரிகிறாள் எப்போதாவது காணல் போல்!

பறந்து திரியும் காதல்கள் சிறகை நீட்டியபடியே மிதக்கிறது!
அவள் உடம்பின் உள்ளிருந்து முளைக்கும் மரக்கிளைகளில்
அவ்வப்போது அமர்ந்து சிறகை மடக்கி சாறலில் இருந்து ஒதுங்கி
அவளுடைய பழங்களை கொத்தியும், அளகை கூறாக்கியும்,
அவள் இலைகளில் எச்சமிட்டும் வாழ்க்கையை ஓட்டிக்கொள்கிறது!

கண்கள் கரைந்து எழுத்துக்களோடு ஓடி நிறைந்ததில் தளும்பும் குளம்!
அலையும் அவள் உடல் முழுக்க பூஞ்சை போல கண்கள்
ஒட்டிவளர்ந்து அசைந்தப்படி நிற்கிறது!
அதன் வழியே சுவாசிக்கிறாள்! ருசிக்கிறாள்!
குளத்தில் கரையும் தூக்கத்தோடு இச்சையும்
துளித்துளியாய் கலக்கிறது இப்போதெல்லாம்!

வெகு நாள் ஆசை அவளுக்கும்..
தன் முகம் எப்படி தான் இருக்கும் என்பதை கண்டுவிட!
நீரின் ஆழத்தில் அவள் பிம்பம் பிரதிபலிப்பதே இல்லை..
வெளிச்சமும் இருட்டும் இல்லாத வெளியாதலால்!
பச்சையும் கசப்பும் காமமும் கலந்த நீரில் முங்கி கரைந்தே போகிறாள்!

வரைகிறேன் என்று வந்து தூரிகையில் அவள் முகத்தை
அடைத்து வைப்பவர்களுக்கும் தெரிவதே இல்லை
எது அவள் கண்கள் உண்மையில் என்று!!

5 comments:

SURYAJEEVA said...

யோசிக்க வைத்து விட்டீர்கள்

அ.முத்து பிரகாஷ் said...

அட... பறவைகள் எச்சமுமிடுமில்லையா..

போகட்டும்..

நானுமிங்கு அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் எனது முகத்திற்கு பொருத்தமான தொப்பிகளை சேகரித்துக் கொண்டே வருகிறேன்..

இப்போது..
அறையெங்கும் தொப்பிகள் நிரம்பி வழிய..
அறையை விட்டு போகும் வழி தெரியாது விழித்துக் கொண்டு..

சு. திருநாவுக்கரசு said...

அற்புதமான வரிகள்! “வரைகிறேன் என்று வந்து தூரிகையில் அவள் முகத்தை
அடைத்து வைப்பவர்களுக்கும் தெரிவதே இல்லை
எது அவள் கண்கள் உண்மையில் என்று!”

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

sakthi2712 said...

It's really nice.
Thanimai en thakkam purinthavargalukku
Ungal kavithai oru kannadiyen pimbam.
Thanks lot. Vetti pulla