Monday, January 25, 2010

ப்ரபஞ்சத்தின் தூரிகை...வெள்ளை நிற குடைப்பிடித்து
வெளிர் சிகப்பு உடை அணிந்து
கை கொள்ளா வண்ண கரைசலை
விரிந்த என் வானசுவற்றில் தெளித்து
அண்டம் முழுக்க உதிரும்
கேள்வி குறிகளில் கால் பதித்து
கருப்பு காலணிகள் அழகாய் பூட்டி
ஏறி செல்வேன் என் வானவில்லினுள்...

ஒளிரும் நட்சத்திரங்களின் மிளிர்ப்பெடுத்து
வழியும் என் அமைதியில் கலந்து
நோக்கும் கண்களின் நிறம்பிரித்து
ஒன்றாய் கொட்டி கலப்பேன்...
முயல்குட்டியின் வாஞ்சையும்
என் மகனின் வாசமும்
உலகின் தாய்மையும் கையுடுத்து
இடுவேன் என் கரைசலுக்குள்...

பசும்புல் ஈரம் கொண்டு
இளம்நீல மேகம் பிழிந்து
அன்பின் சிகப்பெடுத்து
ஏத்துவேன் வண்ணங்களை...
கரைத்தெடுத்த சிகப்புகளும் பச்சைகளும்
அரைத்தெடுத்த என் தங்க நிலவினில்
மெதுமெதுவாய் உருக
மெல்ல மண்டியிட்டு கேட்கிறேன்
என் நிறங்களின் மொழியினை...

சந்தேககோபத்தின் குரல்
பறிக்கும் என் சிரிப்பினை!
யார் அழகென்ற விவாதத்தில்
சலசலக்கும் வண்ணக்குவளை...
புருவம் சுளித்து முறைத்தேன்
உறக்கம் தொலைத்த கண்கொண்டு
ரத்தநாளத்தின் சுவடுகள் அதனுள் தெறிக்க...

சிகப்பிடம் கூறினேன்
நீ என் ஆசை என்று..
கருப்பிடம் கூறினேன்
நீ என் பெண்மை என்று...
பச்சையிடம் சொன்னேன்
நீ என் அழுத்தம் என்று...
நீலத்திடம் சொன்னேன்
நீ என் வெறுமை என்று...

வெண்மையின் மகவுகளாய்
அன்பின் கனவுகள் சுமந்த
நீங்கள்தான் என் மொத்தமும் என
இதழ் நனைக்க முத்தமிட்டேன்...
கைகொண்டு அணைத்து
அள்ளியெடுக்கிறேன்
என் ஆசை உலகம்
புதிதாய் புனைய...

மனம் கொண்டு வரையும்
என் அற்புதபூமியில்
பேரன்பு மென்சருமங்களை வருடும்...
சிலிர்த்தெழும் காதலை இதயம் ருசிக்கும்...
அபரிதமான சமாதானத்தில் உள்ளம் அதிரும்...
புன்னகை மட்டும் உலவும் உயிர்மூச்சாய்...

வழியும் கண்ணீர் துடைக்க
என் வண்ண பட்டாம்பூச்சிகள்
கடன் தரும் மென்சிறகுகளை...
இதயம் உடைக்கும் வார்த்தைகள் தடுக்க
என் அழகு பூக்கள்
கேடயாமாக்கும் அதன் இதழ்களை...

இந்த வெறுப்புகள் அற்ற என் செல்ல ஆகாயத்தில்
தீராத இசை புணரும் நான் வரைந்த வானவில்லை
சலிப்புகள் மறந்து எந்நேரமும்...
சூசகமாய் உரசிய சூட்சம சங்கமத்தில்
பிறக்கும் ஒவ்வொன்றும்
மாறும் என் தூரிகை விரல்களாய்...

ஒரு விரல் கொண்டு வரைந்த என் ப்ரபஞ்சம்
இத்தனை இத்தனை எழிலெனில்
என் விரல்கள் அத்தனையும் பரிசாக்குவேன்
உங்கள் அனைவருக்கும்!

7 comments:

Chitra said...

மனம் கொண்டு வரையும்
என் அற்புதபூமியில்
பேரன்பு மென்சருமங்களை வருடும்...
சிலிர்த்தெழும் காதலை இதயம் ருசிக்கும்...
அபரிதமான சமாதானத்தில் உள்ளம் அதிரும்...
புன்னகை மட்டும் உலவும் உயிர்மூச்சாய்...
..............அழகாய் செதுக்கி செய்த ஆழமான வரிகள். அருமை.

Anonymous said...

arumai Pri! kalakkal varikal! I will post it in tamilish! Cheers!

O.C!

கவிப்ரியா சென்னை said...

உங்கள் தளத்திற்கு இன்றுதான் வந்தேன்! உணர்ச்சிகளை வார்த்தைகளால் அள்ளி எடுத்துவிட்டீர்கள்! நன்றி

Vetti pullai said...

நன்றி chitra, chella, kavipriya,,, glad you liked it...

அண்ணாமலையான் said...

மிக அழகான வரிகள்.. வாழ்த்துக்கள்..

chandra said...

மிக நீளமான கவிதையை உங்களால் எப்படித்தான் எழுதமுடிகிறதோ அதுவும் கவித்துவம் குறையாமல். "இந்த வெறுப்புகள் அற்ற என் செல்ல ஆகாயத்தில்
தீராத இசை புணரும் நான் வரைந்த வானவில்லை" மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

Anonymous said...

பொறாமையாக இருக்கின்றது ப்ரியா நின்று நிதானித்து படிக்க கூட ஞானம் வேண்டும் அவ்வளவு அழகான வார்த்தைக் கோர்வைகள் "கை"தேர்ந்தவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை.இரண்டு வரி கவிதை எழுதவே இரண்டு மணிநேரம் சரி பார்ப்பேன்.வாய்ப்பே இல்லை இது மாதிரி எழுத.ரசிக்கவும் ருசிக்கவும் அருமை அருமை.வாழ்த்துகள்
by
உமாக்ரிஷ்