எனக்கே எனக்காய் ஒரு உலகம் தருவதாய்
சொல்லி தினம் குழைந்தப்படி வரத் தொடங்கிவிட்டாய்!
எங்கு பார்க்கினும் வானுயர மரங்களும்
தரை நோக்கி இறங்கும் வேர்களும்
பூச்சி பிடித்து தின்னும் பூக்களும்
இம் என்ற இறைச்சலோடு
அழகாய் பயமுறுத்தும் பரந்து விரிந்த காடொன்றை
தூக்கி சுமந்தப்படி என் முன்னே நிறுத்த
மரமேறியும் ஓடியும்
தேன் சுவைத்தும் முடித்தப்பின்னே
வேறென்ன என்று கேட்கிறேன்..
தோளை குலுக்கிவிட்டு அகண்ட காட்டை மடித்து
குப்பையில் போட்டுவிட்டு செல்கிறாய்!!!
இன்னுமொரு நாள் கடந்து செல்ல,
மீண்டும் நீ!!
நுரை தெறிக்கும் பெருவெளி!!!
சிறு ஊற்றாய் தொடங்கி,
ஒவ்வொரு நீர்த்துளியாய் சேர்ந்து தைத்து
மெல்ல அகண்டு நதியாய் மாறி,
செங்குத்து பள்ளமொன்றில் ஓ என்ற சப்தமுடன்
விழுந்து உடையும் நீர்வீழ்ச்சியாக
மெல்ல சென்று நீலமும் நுரையும் கலந்த கடலாய் மாறி
சிரமப்பட்டு கையிரண்டில் தூக்கி கொண்டு நீ வர,
முங்கி மறைகிறேன், நீந்தி எழுகிறேன்
மீனோடு பேசிவிட்டு கடலாழத்தில் உணவருந்தி
கொஞ்சம் தூங்கியும் விட்டு
உன் கைவிட்டு இறங்கி
`` இவ்வளவு தானா`` என்று கேட்க
கடலை குடித்து விட்டு அசதியாய் செல்கிறாய்.
இப்படியே ஒவ்வொரு நாள்
வானம் பிடித்து தலையணையில் அடைத்து ஒரு நாள்!
நட்சத்திரங்களை வலையில் பிடித்து ஒரு நாள்!
எல்லா வண்ணங்களையும் குவளைக்குள் கொண்டு ஒரு நாள்!
அண்டவெளியின் அத்தனை சூரியனும் கோர்த்தெடுத்து ஒரு நாள்!
பூமியின் எல்லா நிழல்களையும் ஒன்றாய் தைத்த அழகான உடையோடு ஒரு நாள்!
என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டிருக்கக்கூடுமாயின்
ஒரு வேளை கேட்டிருப்பேன்
இரண்டு வயது குழந்தையின் கனவொன்றையோ
அல்லது புதிதாய் பிரியும் நுனிப்புல் ஒன்றையோ
அல்லது மெலிதாய் உதிர்ந்த பூவொன்றையோ!!!
உனக்கும் புரிவதில்லை! எனக்கும் புரிவதில்லை!
என் தேடல் எதை நோக்கியென்று!!
2 comments:
தேவையென்ன, நிறைவென்ன என்று உணர முடியா நிலை எல்லாவற்றிலும் உண்டு. இலகுவாக மயிலிறகாய் உண்ர்வுகளை சொல்கிறது கவிதை.
Post a Comment