Friday, February 26, 2010

மடித்து கிழிபவைகள்!



தொலைந்து கொண்டிருந்த இன்றைகளில் ஒரு நாள்
கவலையோடு பார்க்கிறேன் என் கால்களையும் அந்த விதானத்தையும்...
பழுப்பேறுகிறது சருமம் தூசியோடு!
சுற்றி முற்றிப் பார்த்து துடைக்க விழைந்தேன்...
அழுக்குகளுக்கு மத்தியில் அங்கும் இங்கும் அழகு சாயம்!
ஓவியங்கள் நிறைந்த அந்த கூடத்தில் சாயம் புதிதல்ல...

சொட்டிய நிறக்குவியல் என்றும் போல ஒதுக்கித் தள்ள முயல
ஏனோ எங்கெருந்தோ விசும்பல் மிக சன்னமாய்!
நெஞ்சுக்கூட்டைத் தொட்டு பிழிய
வெகு நாள் கழித்து அகம்விழித்தேன்...
சத்தம் வந்த வழித்தேடி போக,
மெல்ல என் கால்கள் விட்டத்தை நோக்கி!

எங்கோ ஒரு மூலையில் இருந்து வரும் முனகல்
கிழிந்து கரைந்து போகும் ஏதோ ஒன்றிலிருந்து!
என்றோ வரைந்து மறந்த ஓவியம்...
அமர்ந்து பேச ஏனோ ஆசை உந்த
நீண்ட நேரம் கழித்து உயிர் வாழ்வதாய்
எண்ண தோன்றியது நிமிடங்கள்!

ஏன்.. எப்படி... எதற்கு...
கேள்விகள் கேட்டப்படி நான் தொட!
சாயங்கள் கரைந்தவாறு சொல்லியது விட்டத்தில் சொருகப்பட்ட கதையை...
என்றோ ஒரு அழகான கதிரொளியில் புனையப்பட்டு
காரணங்கள் வெவ்வேறாக காலம் உருள
ஓவியமாகி, தடுப்பாகி, மூலையில் நிறுத்தப்பட்டு
கடைசியில் ஒழுகும் கூரையின் ஓட்டை அடைக்க நேர்ந்த நிலையை!

தொட்ட நேரம் என் கை முழுக்க சாயம் ஒட்ட
சிலிர்க்கிறேன் வெகு நாள் கழித்து!
கரைந்து சொட்டும் வண்ணங்கள் கைக்கொள்ளாது தாங்கி
விட்டத்திலே படுத்து என் மேல் வழிய சிரித்தோம்...
கிழியும் ஓரங்கள் வழியே உலகின் அத்தனை விஷயங்களும்
பேச யத்தனிக்க மனம் மின்மினியானது!
நாளையும் வருவாயா என்னோடு பேச என்று கேட்க
ஆமென்று கூறி கீழிறங்கி விடைப்பெற்றேன் ஓவியத்திடம்!

சிதிலங்கள் தொட்ட விஸ்தாரங்கள்
உடைந்து விழுந்த தடுப்புகளையும்
உளுத்து போன கதவுகளையும்
என் கால் தாண்ட இயலாது போனது!
என்றாவது எனக்கும் நினைவுக்கு வரலாம்
வண்ணம் பறிமாறிய பொழுதுகளும்..
பேசி சிரித்த கணங்களும்...
திரும்ப பார்க்க நினைத்தவைகளும்..

இப்போதைக்கு என்னால் செய்ய இயன்றது
பிரார்த்தனை மட்டுமே..
மழை இன்னும் கொஞ்ச நாள் வராது போகட்டுமே!
மீதமுள்ள வண்ணமாவது கரையாது நிற்கலாம்...
பேசவிழயும் ஓரங்கள் மக்கினாலும்
உணர வண்ணங்களாவது மிஞ்சுமே!

3 comments:

Chitra said...

மழை இன்னும் கொஞ்ச நாள் வராது போகட்டுமே!
மீதமுள்ள வண்ணமாவது கரையாது நிற்கலாம்...


.......... உணர்வு அலைகளை கவித்துவமாக வெளிப்படுத்தி இருக்கீங்க. அருமை.

Thenammai Lakshmanan said...

//மழை இன்னும் கொஞ்ச நாள் வராது போகட்டுமே!
மீதமுள்ள வண்ணமாவது கரையாது நிற்கலாம்...//


அட பிரியா சித்ராவுக்கு பிடித்ததே எனக்கும் பிடித்து இருக்கிறதே கவிதை அருமை

Unknown said...

//கரைந்து சொட்டும் வண்ணங்கள் கைக்கொள்ளாது தாங்கி
விட்டத்திலே படுத்து என் மேல் வழிய சிரித்தோம்...//
மனம் விரும்பும் தருணங்கள் சந்தோஷம் கொடுத்து சந்தோஷம் பெறும் தருணங்கள்.