எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிந்து போகும்
ஏதோ ஒரு பாதை ஓரத்தில்
யாரோ ஒரு நீயும் யாரோ ஒரு நானும்
எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கிறார்கள்!
கேள்விகளையும் பதில்களையும்
லேசான சிரிப்புடனும் கோபத்துடனும்
பிண்ணியபடியே செல்லும் அவர்களுக்கு
தெரியாது நாளை எப்படி என்று!
கேள்விகள் குமிழிகளாய் மாறி பறந்து அங்கங்கே
நடந்து கொண்டிருக்கும் நீ / நான் மீது மோதி வெடிக்கிறது!
நீ : உன் உடலெல்லாம் மூட பூ வேண்டுமா? பட்டாம்பூச்சி வேண்டுமா?
நான்: என் மேலமர்ந்ததும் மெத்தென்று பூவாக மாறிப்போகும் பட்டாம்பூச்சியும், என் மேல் விளைந்த பூக்கள் இறக்கை முளைத்து
பறந்து போகவும் வேண்டும்
நீ: வானவில்லில் ஏறி சறுக்குமரம் ஆடுவாயா? ஊஞ்சல் கட்டுவாயா?
நான்: வானவில்லை விண்டு வாயில் போட்டு விழுங்கி உடம்பெல்லாம் மாறும் நிறத்தை பார்ப்பேன்!
நான்: நீ வானம் வரை பெரிதாக வளர்வாயா? இல்லை குறுகி அணு அளவு ஆவாயா?
நீ: அணுவளவு குறுகிப்போய் உன்னோடே எப்போதும் இருக்கலாம், இல்லையா!
நீ: பூவில் எந்த பூ பிடிக்கும் உனக்கு?
நான்: சிகப்பு வரிகள் ஓடியபடி அரிசி போல் கூராக இருக்கும் ஜாதிமல்லி!!
நாட்கள் ஓட, பல நீயும் நானும் காணாமலே போனாலும்
இப்படியாக தொடங்கி முடியும்
கேள்விகளும் பதில்களும் மட்டும்
இப்போதெல்லாம் நிறைய பறந்து
தெறித்து உடைந்துகொண்டே இருக்கிறது!!