Monday, April 11, 2011
நெருடல் ஆகிறேன்!!!
பிறந்தது தொட்டு கதைகளில் மட்டுமே வசித்து வருகிறேன்!
தவழ்ந்ததும் ஓடியதும் ரசித்ததும் புத்தகங்களுக்குள்ளேயே..
பக்கத்துக்கு பக்கம் மாறும் கதைக்குள்ளே
நடந்து செல்லும் மாளிகைகளும்
கீழிருந்து மேல் எழும்பும் அருவிகளும்
வாய் பேசும் மரங்களும், பறக்கும் மலைகளும் நிறைய!
ஓடும் என் மாளிக்கைக்குள் எல்லாமே புத்தகங்கள்!
கதைக்குள் கதையாக, பக்கங்களை தாண்டி
இன்றொருவனின் சிரிப்புக்கு நடுவே புகுந்து
நாளை ஒருவனின் கோபத்துக்கு இடையே வளைந்து
மற்றொரு நாள் சிலரின் அழுகையின் ஊடே புதைந்து போகிறேன்!
தினம் விளையாட தோழமைகளுண்டு!
தினம் மிதக்க காதல்களும் உண்டு!
தினம் விதவிதமான கலவிகளும் உண்டு!
பிறப்புக்கள் உண்டு! இறப்புக்களும் உண்டு!
ஒரு கதையில் மரணித்து, இன்னொரு கதையில் பிறக்கிறேன்!
ஒரு கதையில் வாளிட்டு, மற்றொரு கதையில் பிரார்த்திக்கிறேன்!
இன்னும் எத்தனை நாள் இப்படியே போகும்...
சலசலக்கும் என் புத்தகத்தின் எழுத்துக்கள்!
மடித்து நீட்டிய இரவுகளின் நீளம்
காகிதத்தில் கோடுகளாய் ஒடும்...
சொல்ல மறக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
குவிந்து மூலையில் வளர்ந்து கொண்டே...
விட்டு செல்பவர்கள் எல்லோரும் விட்டே செல்கிறார்கள்
என் புத்தகத்தின் ஓரத்தில் மடித்ததன் அடையாளத்தை!
என்ன நடப்பினும் மிஞ்சி என் கதைகளில் பிரயாணிப்பது
நானும் என் உடைந்த மாளிகைகளும் மட்டுமே!
புத்தகத்தின் ஓரங்களிலும், புகுந்து செல்வோர் வாழ்விலும்
நெருடல் மட்டுமே ஆகிப்போகிறேன்!
Subscribe to:
Posts (Atom)