Thursday, November 3, 2011

கீச்சுக்களின் குசுகுசுப்பு 2

எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும் தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்...


இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..

இசையில் புத்தகங்களில் இருக்கும் வகைமை வாழ்விலும் மனிதர்களிலும் இருக்கும் போல.இத்தனை பயணப்பட்டும் மனிதர்கள் இன்னும் புதிராகவே தெரிகிறார்கள்

சிரிப்பும் நிறமும் சேர்ந்து குழையும் கனவுகளில் மத்தியில், மிருதுவான குளிரோடு ஒற்றை பனித்துளியாய் இறங்கி நெகிழவைக்கிறாய் தோழா..

Friday, October 21, 2011

இச்சை குளம்!!!

தூக்கங்களின் துளிகள் சொட்டியபடியே இருக்கிறது!
முகங்களில் நடுவே இருந்த கண்களும் கரைந்து வழிகிறது!
குவியும் துளிகள் திரண்டு ஓடையாகி,
என்றோ எழுதிய கவிதை போன்ற ஏதோ ஒன்றின் மேடு பள்ளத்தில்
விழுந்தும் புரண்டும் சிதறி சேர்கிறது அவளுக்குள்!
குளத்தின் உள் அவள் தெரிகிறாள் எப்போதாவது காணல் போல்!

பறந்து திரியும் காதல்கள் சிறகை நீட்டியபடியே மிதக்கிறது!
அவள் உடம்பின் உள்ளிருந்து முளைக்கும் மரக்கிளைகளில்
அவ்வப்போது அமர்ந்து சிறகை மடக்கி சாறலில் இருந்து ஒதுங்கி
அவளுடைய பழங்களை கொத்தியும், அளகை கூறாக்கியும்,
அவள் இலைகளில் எச்சமிட்டும் வாழ்க்கையை ஓட்டிக்கொள்கிறது!

கண்கள் கரைந்து எழுத்துக்களோடு ஓடி நிறைந்ததில் தளும்பும் குளம்!
அலையும் அவள் உடல் முழுக்க பூஞ்சை போல கண்கள்
ஒட்டிவளர்ந்து அசைந்தப்படி நிற்கிறது!
அதன் வழியே சுவாசிக்கிறாள்! ருசிக்கிறாள்!
குளத்தில் கரையும் தூக்கத்தோடு இச்சையும்
துளித்துளியாய் கலக்கிறது இப்போதெல்லாம்!

வெகு நாள் ஆசை அவளுக்கும்..
தன் முகம் எப்படி தான் இருக்கும் என்பதை கண்டுவிட!
நீரின் ஆழத்தில் அவள் பிம்பம் பிரதிபலிப்பதே இல்லை..
வெளிச்சமும் இருட்டும் இல்லாத வெளியாதலால்!
பச்சையும் கசப்பும் காமமும் கலந்த நீரில் முங்கி கரைந்தே போகிறாள்!

வரைகிறேன் என்று வந்து தூரிகையில் அவள் முகத்தை
அடைத்து வைப்பவர்களுக்கும் தெரிவதே இல்லை
எது அவள் கண்கள் உண்மையில் என்று!!

Saturday, August 27, 2011

நான் எனும் ஏதோ ஒன்று!!!

உன்னை நான் எங்கும் பார்த்ததில்லை!
பார்ப்பேன் என்று நினைத்தப்பிறகு வந்தாய்
நான் எண்ணிய நீ என எண்ணிக்கொண்டிருந்தேன்!
உன் முகம் போன்ற ஒரு முகம் என் நினைவில்
உன் பேச்சும் பார்வையும் கூட அது போலவே!
ஆனால் நான் எண்ணிய நீயாக நீ இல்லை
இன்றைகளுக்குள்ளும் நாளைகளுக்குள்ளும்
புகுந்துதேடிக்கொண்டே இருக்கிறேன்
உனக்குள் நான் எண்ணிய நீயை!
மெதுவாக உருளும் நேரத்தின் கொலையில்
வடிந்து கரையும் தெளிவிற்குள் உணர்வது
நீ என்பது நான் எண்ணிய உருவமே!
நீ என்பது நான் எண்ணிய உள்ளமில்லை என்று!
உன் முடிவுகள் என்னை சுற்றியே வட்டமிட்டு
ஊர்ந்தபடியே என்னையும் ஆழ்ந்து நடுகிறது!
உரமாக என்னையே தெளித்து
விதையாக என்னையே நட்டு
தண்ணீராக என்னையே பாய்ச்சி
வளர்வேனா என்று பார்த்து நிற்கிறது
உன் குறிக்கோள்கள்!
உன்னால் என் கோபவேர் வெயில் பட்டு தழைத்து தரையிலும்
உனக்கு பயந்து என் காய்ந்த இலைகள் பூமிக்குள் நெளிகிறது!
இப்படி நான் எனும் ஏதோ ஒன்றை
தழைத்து வளர்கிறேன்
உன் கேள்விகளையும் என் மௌனங்களையும்
தாங்கியபடி!

Tuesday, August 9, 2011

கீச்சுகளின் குசுகுசுப்பு!!!


சட்டென பொங்கி அடங்கும் கோபங்களை எங்கு கொண்டு கொட்டுவது என்று தெரியாது போகிறது...

வாழ்க்கையில் எல்லாமே expiry date உடன் தான் வருகிறது. அது பொருளோ, உயிரோ, உணர்வோ எதுவானாலும் சரி!

கூடவே இருந்து குப்பை கொட்டும் மனைவியை விட கண்முன் தோன்றி மறையும் காதலிகள் வினோதமாக தெரிகிறார்கள். Guess the mystery get lost with wives.

பல வேளைகளில் கானலை தேடித்தான் தொலைகிறோம்...

என் விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே முள்ளாய் நிற்கிறாயே



Friday, July 8, 2011

இன்னும் காணாத கனவுகளை தேடி!!!

வந்து வந்து வெறுமையாய் திரும்பி செல்லும் கடலலை!
ஆளின்றி காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சல்!
ஏதோ சூட்சமத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கடிகார பெண்டுலம்!
காய்ந்து உதிர்ந்து கருகும் வரை எங்கெங்கோ அலையும் இலை!
இது போன்ற ஏதோ விசையாக சுழல்கிறாய் என்னுள்...

என் மனதின் கைப்பிடி என் கைக்குள் சிக்கி தடுமாறும்!
ஒருகணம் உன்னை கைதியாக்கி நானே எனக்குள் இடுகிறேன்..
மறுகணம் நானே உன் நினைவுகளை பெறுக்கி வெளியே எறிகிறேன்..
உள்ளிருக்கிறாயா? வெளியேறிவிட்டாயா?
உனக்குள்ள குழப்பம் தான் எனக்கும்!

உன் நினைவுகள் மட்டுமே எனக்கான நங்கூரம்!
இன்றைய ஓட்டங்கள் முடிந்து நான் சுருண்டு உறங்குவதும்
உன் சிரிப்புக்குள் மட்டும் தான்!
எனக்கான தேவைகள் உன் தேவைகளின் கழுத்தை கவ்வி
ரத்தம் உறிந்து கொன்றுவிடும் பெருவல்லமை கொண்டவை!

கைக்குள் வைத்திருக்கிறேன் உன்னோடு கண்ட நிறங்களை..
நீ காட்டிய தெரியாத உலகங்களில் வாசத்தோடு சேர்த்து!
எனக்காக என்னோடு இருந்த உன்னை
உனக்காக வேண்டி பறக்கவிடுகிறேன்
பட்டமாக அல்ல பருந்தாக!

என்னுடைய கனவுகள் முழுக்க உதிர்ந்துவிட்டதால்..
உனக்கான கனவுகளை தேடிக்கொள்வாய் என்ற
வேண்டுதலோடு....

Saturday, June 25, 2011

ஆமை ஓடு காதல்!!!



சிறகுகள் உதிர்ந்து முளைக்கிறது நிதம் நிதம்
வளர வளர தோல் உரிக்கிறேன்!
வெள்ளையாகவும் கறுப்பாகவும் வெள்ளியும் தங்கமுமாக
மிதக்கும் பகல்களில் ஊர்கிறேன் !!!
நடக்கும் இரவுகளில் பறக்கிறேன் !!!

உள்ளுக்குள் எங்கேயோ ஒரு இடம்
உலையாய் தகித்து கொண்டிருப்பதேனோ!!!
கொதித்து கொப்பளிப்பதன் வலி எங்கு தெறிகிறது
தெரியாத தேடல் என்னிடம்!!!
இதயம் வெறும் கடிகாரம் என்றால்
மனது எங்கே நிற்கிறது?
மூளையின் உள்ளேயா!!!

இத்தனை குழப்பத்தின் முனையிலும்
எந்த இடத்தில் உணர்கிறேன் என் காதல்களை
என்று தெரியாது திரிகிறேன்..
சிதையும் உடலுக்குள் எங்கெங்கு என் மனது திரிந்தாலும்
மனதின் மேலே உடையா ஓடு வேய்ந்து
வலம் வரும் வரம் எனக்கு!!!

பசுமை காதல் எப்போதாவது எட்டிப்பார்க்கையில்
நானும் நீட்டுகிறேன் ஓட்டின் உள்ளிருந்து என் மனதை!
நீ பேசும் வார்த்தைகளை உண்டு,
உன் சிரிப்பை குடித்து வளர்க்கிறேன் என்னை...
மெதுவாய் கலங்கும் உன் பிரிவை தூரப்பார்க்கையில்
இதோ சுருக்கிக்கொள்கிறேன் என் மனதை...
இன்னும் ஒரு காதல் எட்டி பார்க்கும் வரை!!!

Friday, May 13, 2011

கறையாகி கரைகிறேன்!!!

சொல்ல நினைத்து சொல்லாமல் விடுபட்டவை
படபடக்கிறது கண்ணீருக்குள்!
கேள்வி குறிகளை மேலே வைத்து பறந்துவிடாமல்
பார்த்து நிற்கிறேன் என்வீட்டு கூரையை...
கடந்து வந்த காலத்தின் கருமை மேனியில் படர்ந்து
நானும் நிற்கிறேன் இப்போதெல்லாம் நிழலாய்!

உன்னிடமும் அல்லாது வேறு யாரிடம் கொண்டு சேர்ப்பது
என் பயத்தின் நரம்பால் பின்னிய மூட்டையை!
அதற்குள் கிடப்பது கடந்து வந்த காலத்தின் தடயங்கள் தாங்கி
நரையும் மூப்பும் கலந்து தழும்பாகி போன ஒரு நான்!
முதன்முதல் உன்னை பார்த்தப்பின் மெல்ல
உரித்து போட்டேன் அந்த என்னை..
இப்பவும் அணிந்து கொள்ள சொல்லி கெஞ்சுகிறது
மெல்ல மூட்டையின் உள்ளிருந்து!

உன்னோடு இல்லாத பொழுதுகளில்
வந்து சேரும் பயம் கலந்து முதுகில் சுமக்கும்
பொதி வளர்ந்துகொண்டே இருக்க...
உன் கண் பார்க்க நேரிடுகையில் இறந்து பூக்கிறது!

எங்கு தொடங்கி எங்கு முடிந்ததோ
தெரியாது தேடுகிறேன் என் பகலை!
வருடங்கள் தாண்டி சென்றதில் எங்கோ
தொலைந்திருக்கக்கூடும் வெளிச்சம்...
வலிமட்டும்தான் இருப்பதன் ஒரே உணர்வாகி இருக்க
எங்கிருந்து வாழ்க்கையை திருத்தி எழுத
என்று தெரியாது விழிக்கிறேன்.

தினம்தினம் பிறக்கும் என் உடலோடு என் மனது
ஒன்றுபடாத வினாடிகளில்
விகாரங்கள் கட்டித் தழுவுகிறது...
நிழலுமாகி கறையுமாகி
கரையும் வேளைகளில் மட்டும்
இறந்து போகிறேன்...
மீண்டும் உன் கண் பார்க்கும்வரை!

Monday, April 11, 2011

நெருடல் ஆகிறேன்!!!



பிறந்தது தொட்டு கதைகளில் மட்டுமே வசித்து வருகிறேன்!
தவழ்ந்ததும் ஓடியதும் ரசித்ததும் புத்தகங்களுக்குள்ளேயே..
பக்கத்துக்கு பக்கம் மாறும் கதைக்குள்ளே
நடந்து செல்லும் மாளிகைகளும்
கீழிருந்து மேல் எழும்பும் அருவிகளும்
வாய் பேசும் மரங்களும், பறக்கும் மலைகளும் நிறைய!

ஓடும் என் மாளிக்கைக்குள் எல்லாமே புத்தகங்கள்!
கதைக்குள் கதையாக, பக்கங்களை தாண்டி
இன்றொருவனின் சிரிப்புக்கு நடுவே புகுந்து
நாளை ஒருவனின் கோபத்துக்கு இடையே வளைந்து
மற்றொரு நாள் சிலரின் அழுகையின் ஊடே புதைந்து போகிறேன்!

தினம் விளையாட தோழமைகளுண்டு!
தினம் மிதக்க காதல்களும் உண்டு!
தினம் விதவிதமான கலவிகளும் உண்டு!
பிறப்புக்கள் உண்டு! இறப்புக்களும் உண்டு!
ஒரு கதையில் மரணித்து, இன்னொரு கதையில் பிறக்கிறேன்!
ஒரு கதையில் வாளிட்டு, மற்றொரு கதையில் பிரார்த்திக்கிறேன்!

இன்னும் எத்தனை நாள் இப்படியே போகும்...
சலசலக்கும் என் புத்தகத்தின் எழுத்துக்கள்!
மடித்து நீட்டிய இரவுகளின் நீளம்
காகிதத்தில் கோடுகளாய் ஒடும்...
சொல்ல மறக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
குவிந்து மூலையில் வளர்ந்து கொண்டே...

விட்டு செல்பவர்கள் எல்லோரும் விட்டே செல்கிறார்கள்
என் புத்தகத்தின் ஓரத்தில் மடித்ததன் அடையாளத்தை!
என்ன நடப்பினும் மிஞ்சி என் கதைகளில் பிரயாணிப்பது
நானும் என் உடைந்த மாளிகைகளும் மட்டுமே!
புத்தகத்தின் ஓரங்களிலும், புகுந்து செல்வோர் வாழ்விலும்
நெருடல் மட்டுமே ஆகிப்போகிறேன்!